மக்காச்சோள பயிருக்கு காப்பீட்டு திட்டத்தை நீட்டிக்க வேண்டும்; நெல் விவசாயிகளுக்கு மட்டும் காப்பீட்டு சலுகை தருவதா
மக்காச்சோள பயிருக்கு காப்பீட்டு திட்டத்தை நீட்டிக்க வேண்டும்; நெல் விவசாயிகளுக்கு மட்டும் காப்பீட்டு சலுகை தருவதா
ADDED : நவ 23, 2024 05:34 AM

மதுரை ; நெல்லுக்கு சலுகை வழங்கியதைப் போல பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மக்காச்சோள பயிர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை நீட்டிக்க வேண்டுமென தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் நெல்லுக்கு அடுத்து முக்கிய பயிராக மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. 4.26 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 30 லட்சம் டன் வரை உற்பத்தியாகிறது. குறைந்த செலவில் அதிக விளைச்சல் பெற்று வருமானத்தை அதிகரிக்கும் இப்பயிர் பெரும்பாலும் மானாவாரியில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் பெரம்பலுாரில் அதிகபட்சமாக 66ஆயிரம் எக்டேர், துாத்துக்குடியில் 52ஆயிரம், சேலத்தில் 39ஆயிரத்து 500, திண்டுக்கல்லில் 30ஆயிரம், திருப்பூர், கடலுார், மதுரை, அரியலுாரில் தலா 25ஆயிரம் எக்டேரிலும் பிற மாவட்டங்களில் சிறிய பரப்பளவிலும் பயிரிடப்படுகிறது.
இந்தாண்டுக்கான ராபி சிறப்பு பருவத்திற்கான பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டமானது நெல், மக்காச்சோளம், பருத்திக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்காச்சோளத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.29ஆயிரத்து 400 காப்பீட்டுத் தொகைக்கான ரூ.441 பிரீமியத்தொகையை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் விவசாயிகள் செலுத்தி பதிவு செய்யலாம். நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். நவ., 15 ம் தேதிக்குள் காப்பீட்டுத் தொகையை செலுத்த விவசாயிகளுக்கு கெடு வழங்கப்பட்டது.
புரட்டாசி பட்டத்தில் மானாவாரியாக பயிரிடப்பட்டாலும் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் பெரும்பாலான விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியை தொடங்கவில்லை. தற்போது தான் விதைப்பு பணிகளை துவங்கியுள்ள நிலையில் காப்பீட்டுத் திட்டம் முடிந்து விட்டதால் தேதியை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க மாநில கவுரவ தலைவர் ராமன் கூறியதாவது:
நெல் விவசாயிகளுக்கும் நவ., 15 ம் தேதியுடன் காப்பீட்டு திட்டம் முடிவடைந்தது. அவர்களுக்கு மட்டும் மத்திய அரசிடம் அனுமதி பெற்று நவ., 30 வரை தேதியை நீட்டித்து தமிழக அரசு காப்பீட்டு பிரீமியத் தொகை செலுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தாண்டு மழை காரணமாக மக்காச்சோள விதைப்பு பணி தாமதமானது. மானாவாரியில் ஏழை விவசாயிகள் பயிரிடும் மக்காச்சோளத்தை மட்டும் அரசு கண்டுகொள்ளவில்லை.
நவ.,15 க்கு பின் காப்பீட்டு திட்டத்தை நீட்டிக்கவில்லை. தற்போது பிரீமியத் தொகை செலுத்த விவசாயிகள் தயாராக உள்ளனர்.
எனவே தமிழக அரசு மக்காச்சோள விவசாயிகளுக்காக மத்திய அரசிடம் அனுமதி பெற்று கூடுதலாக 15 நாட்கள் வரை பயிர் காப்பீட்டு திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்றார்.