ADDED : மே 11, 2025 03:06 AM

அழகர்கோவில்:மதுரை சித்திரை திருவிழாவில், அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக, நேற்று மாலை அழகர்கோவில் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் கண்டாங்கி பட்டுடுத்தி, கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார். நாளை அதிகாலை, 5:45 முதல் 6:05 மணிக்குள் வைகையில் எழுந்தருள்கிறார்.
இதை முன்னிட்டு, நேற்று, சுவாமிக்கு நுாபுர கங்கை தீர்த்தத்தில் அபிஷேகம், திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது.
கள்ளழகர் அலங்காரத்தில், சிறப்பு பூஜை செய்தனர்.
கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் 18ம் படி கருப்பண்ணசுவாமியிடம் உத்தரவு பெற்று, மேளதாளங்களுடன் கள்ளழகர் மதுரை புறப்பட்டார்.
இரவு பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.
இன்று அதிகாலை 5:30 மணி முதல் மூன்று மாவடியில் எதிர்சேவை நடக்கிறது. இரவு தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் எழுந்தருளுவார்.
இன்று நள்ளிரவு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையுடன், ஆயிரம் பொன் சப்பரத்தில் தமுக்கம் கருப்பண்ணசுவாமி கோவிலில் எழுந்தருள்கிறார்.
அங்கிருந்து அதிகாலை 3:00 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்படுகிறார். அதிகாலை 5:45 மணி முதல் 6:05 மணிக்குள் வைகையில் எழுந்தருள்கிறார்.
மதியம் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி உத்சவம் நடக்கிறது.

