கரூர் துயர சம்பவத்தால் எழுத்தாளர்களுக்குள் மோதல் இருதரப்பாக பிரிந்து இணையத்தில் மல்லுக்கட்டு
கரூர் துயர சம்பவத்தால் எழுத்தாளர்களுக்குள் மோதல் இருதரப்பாக பிரிந்து இணையத்தில் மல்லுக்கட்டு
ADDED : அக் 08, 2025 04:08 AM
சென்னை:கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இரு பிரிவாக பிரிந்து வெளியிட்ட கூட்டறிக்கை, அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 27ம் தேதி, கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். 'இதற்கு த.வெ.க.,வினரே காரணம்' என, தி.மு.க., தரப்பும், 'காவல் துறையே காரணம்' என, த.வெ.க., தரப்பும் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், அக்., 2ம் தேதி முன்னாள் நீதிபதி சந்துரு, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பாலகிருஷ்ணன், தேவசகாயம், எம்.பி.,க்கள் ரவிக்குமார், சல்மா, எழுத்தாளர்கள் வண்ணதாசன், பொன்னீலன், பெருமாள் முருகன் உள்ளிட்ட, 200க்கும் அதிகமானோர் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
அதில் 'விஜய் தன் கட்சியினரையும் ரசிகர்களையும் சந்திக்க தெரிவு செய்துள்ள முறை, அரசியல் முதிர்ச்சி, பொது வாழ்க்கை, தனிமனித கண்ணியத்திற்கு உகந்ததல்ல. இதுவே பேரழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது . அரசின் மீது பழிசுமத்தி விட்டு தப்பித்து விடும் உள்நோக்கம் தெரிகிறது. குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, இதுவரை தன் கொள்கை எதிரி என்று குறிப்பிட்டு வந்த வலதுசாரிகளை அண்டி நிற்கவும் தயாராகி விட்டார்' என கூறப்பட்டிருந்தது.
'கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும், சட்டத்தின் முன்நிறுத்த, தமிழக அரசு தயங்கக்கூடாது' எனவும் கூறப்பட்டிருந்தது.
அதற்குப் பதிலடியாக, 'படைப்பாளர்கள் சங்கமம்' அமைப்பு சார்பில், எழுத்தாளர்கள் திராவிட மாயை சுப்பு, இசைக்கவி ரமணன், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், பேராசிரியர் கனகசபாபதி, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கவிஞர்கள் லட்சுமி மணிவண்ணன், ரவி சுப்பிரமணியன், பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி உள்ளிட்ட, 200க்கும் அதிகமானோர் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
அதில் 'தி.மு.க., அரசின் தவறுகள் வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே, அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில் கையொப்பமிட்டுள்ள அனைவருமே தி.மு.க., கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள். தாங்கள்தான் ஒட்டுமொத்த தமிழக எழுத்தாளர்களின் பிரதிநிதிகள் போன்ற தோற்றத்தை 'உருவாக்கும் தாதா மனப்பான்மையை ஏற்க முடியாது' என, அதில் கூறப்பட்டுள்ளது.
இதனால் எழுத்தாளர்கள் இரு தரப்பாக பிரிந்து, சமூக வலைதளங்களில் மோதலில் ஈடுபட்டுள்ளனர். 'ஆர்.எஸ்.எஸ்., ஆதரவாளர்கள், எழுத்தாளர்கள் என்ற பெயரில் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்' என, விஜயை கண்டித்து அறிக்கை விட்ட எழுத்தாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தன் இணையதள பக்கத்தில் எழுதியுள்ள எழுத்தாளர் ஜெயமோகன், 'கூட்டாக எழுத்தாளர்கள் அறிக்கை விடுவது என்பது எழுத்தாளர் என்ற அடையாளத்திற்கு எதிரான ஒரு செயல்.
அரசின் சலுகைகளுக்காக கூட்டறிக்கைகளில் எழுத்தாளர்கள் கையெழுத்திடுகின்றனர்.இதேபோன்று, பா.ஜ.,வும் ஓர் எழுத்தாளர் அணியை திரட்டி இருக்கிறது. ஆனால், பா.ஜ.,வின் மனநிலை என்பது அள்ளிக் கொடுக்கும் தன்மை கொண்டது அல்ல; கிள்ளித்தான் கொடுக்கின்றனர். முழு நேரமாக கட்சிக்காக குரல் கொடுத்து வந்த மாலன் முதல் அரவிந்தன் நீலகண்டன் வரையிலானவர்களுக்கு, கட்சி அநேகமாக எதையுமே கொடுக்கவில்லை' என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதற்கு எழுத்தாளர்கள் மாலன், அரவிந்தன் நீலகண்டன் இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாலன் வெளியிட்ட பதிவில், 'நான் எந்தப் பலனையும் எதிர்பார்த்து, எவரையும் ஆதரிப்பதோ, எதிர்ப்பதோ இல்லை. நான் பிரச்னைகளின் அடிப்படையில் மட்டுமே கருத்து தெரிவிக்கிறேன். எனக்கு எழுத்து என்பது சமூகக் கடமை; அது வணிகமல்ல. எல்லாவற்றிலும் லாபம் பார்க்க விரும்பும் வணிகர்களால் இதை புரிந்து கொள்ள முடியாது' என, காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
அரசியல் கட்சிகளுக்குள் மோதலை ஏற்படுத்திய கரூர் துயரச் சம்பவம், எழுத்தாளர்கள் இடையேயும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.