ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிற்பம்: சுற்றுலா பயணியர் பார்க்க செல்ல முடியாத அவலம்
ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிற்பம்: சுற்றுலா பயணியர் பார்க்க செல்ல முடியாத அவலம்
ADDED : பிப் 17, 2025 06:30 AM

அரியலுார்: ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிற்பம் உள்ள சலுப்பை கிராமத்தில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலா தலமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரியலுார் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள சலுப்பை கிராமத்தின் எல்லையில், துறவுமேல் அழகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிற்பம் உள்ளது.
ராஜேந்திர சோழன் படையில் இருந்த யானைப்படை மற்றும் குதிரைப்படை வீரர்கள் இப்பகுதியில் தங்க வைக்கப்பட்டதாகவும், அதற்காகவே அக்காலத்தில் சலுப்பை கிராமத்தில் இந்த யானை சுதை சிற்ப சிலை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வரலாறு
ராஜேந்திரசோழன் ஆட்சிக் காலத்தில் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து, அதில் வெற்றி பெற்றதன் நினைவாக, அங்கிருந்து கொண்டு வரப்பட்ட துர்க்கை அம்மன் சிலை இங்குள்ள கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டு வந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது.
இந்த யானை சுதை சிற்பம் கி.பி., 16-17ம் நுாற்றாண்டில் நாயக்கர் காலத்தில் வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்புக் கலவையால், சுட்ட செங்கற்கள் வைத்து கட்டப்பட்டுள்ளது. 33 அடி நீளமும், 12 அடி அகலமும், 60 அடி உயரமும் உடைய இந்த சிலை இன்றளவும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.
இந்த யானை சிலையின் கால்களுக்கு இடையே பக்கவாட்டில் மூன்று பேர் என, இரு பக்கத்திலும், ஆறு பேர் தாளமிடும் கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
முன்புறம் தும்பிக்கையை தாங்கிய நிலையில் ஒருவர் நிற்பது போன்றும், அவருடைய கால் யானையின் காலில் சிக்கி இருப்பது போன்றும் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஒரு காலத்தில் இந்த பகுதியில் பலா மரங்கள் அதிகம் இருந்ததாகவும், அப்போது, திருடன் ஒருவன் பலா மரத்திலிருந்து பலா ஒன்றை பறித்துக்கொண்டு ஓடிய போது, திருடனை யானை பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறே, யானையின் தும்பிக்கையில் பலாப்பலத்துடன் ஒருவர் நிற்பது போன்ற சிலை உள்ளது. இந்த யானை சிலையின் கழுத்து மற்றும் உடலின் இருபுறங்களிலும் மணிகளால் அலங்கரிக்கப்பட்டு, அழகாக காட்சி அளிக்கிறது.
தமிழக தொல்லியல் துறை, இந்த சுதை சிற்பத்தை புராதன சின்னமாக 2020 டிசம்பர், 11ல் அறிவித்தது.
இதையடுத்து, பாசி படர்ந்து காணப்பட்ட சிற்பம், தொல்லியல் துறையால் துாய்மைப்படுத்தப்பட்டு, பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சிற்பம் பலருக்கும் தெரியாத நிலை உள்ளது. தற்போது புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட பின்னரே, சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. நகரை விட்டு சற்று தள்ளி, கிராமப் பகுதியில் இருப்பதால் பலரும் அங்கு செல்வதில்லை.
கோரிக்கை
வாகனங்கள் சென்றுவர சாலை வசதி இல்லை. கோவிலின் அருகில் உணவகமோ, பெரிய கடைகளோ இல்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு. இச்சிலையை பார்க்க செல்ல வேண்டுமானால், பிரதான சாலையை கடக்க வேண்டும்.
அந்த சாலை கடந்த நவம்பரில் பெய்த மழையில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், சுற்றுலா பயணியர் சிலையை பார்க்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இச்சாலையை சீரமைத்து, சாலை வசதி, தங்கும் விடுதி, ஹோட்டல், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகமும், தமிழக தொல்லியல் துறையும் நடவடிக்கை எடுக்க, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுக்கின்றனர்.