காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவிழக்கும் வானிலை மையம் தகவல்
காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவிழக்கும் வானிலை மையம் தகவல்
ADDED : டிச 25, 2024 12:57 AM
சென்னை:'வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வலுவிழக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.
அந்த மையத்தின் அறிக்கை:
தென் மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில், தமிழகத்தின் வட கடலோரம், தெற்கு ஆந்திரா கடலோரத்தை ஒட்டி, நேற்று முன்தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அப்படியே தொடர்கிறது. நேற்று நிலவரப்படி, தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியில், இந்த சூழல் நிலவியது.
இது, இன்று அதே பகுதியில் படிப்படியாக வலுவிழக்க கூடும்.
அதே நேரத்தில், லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தின் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்கள், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும், 30 வரை, இதே நிலை தொடர வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் வட கடலோரம், தெற்கு ஆந்திர கடலோரம், மத்திய மேற்கு வங்கக் கடல் உள்ளிட்ட பகுதிகளில், இன்று சூறாவளி காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

