அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பணியிடம் காலி என்பதே இனி இருக்காது: அமைச்சர் உறுதி
அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பணியிடம் காலி என்பதே இனி இருக்காது: அமைச்சர் உறுதி
ADDED : பிப் 18, 2025 04:22 AM
சென்னை: ''தமிழகத்தில், 2,642 டாக்டர்கள் பணியிடங்கள், இன்னும், 10 நாட்களில் நிரப்பப்படும். அதன்பின் காலி பணியிடம் என்ற நிலையே இருக்காது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை சைதாப்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியர் உயர் வகுப்புகளுக்கு செல்வதற்காக, 8 லட்சம் பேருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு உள்ளதால், கல்வித்திறன் உயர்ந்துள்ளது. இதனால், ஆண்டுதோறும் அரசு பள்ளிகளின் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர்ந்து வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 2,642 டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதற்காக விண்ணப்பித்த, 4,585 டாக்டர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி முடிந்துள்ளது. அதில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணியாற்ற விருப்புள்ள இடங்களுக்கான பொது கலந்தாய்வு நடத்தப்படும்.
பின், 2,642 டாக்டர்களுக்கு இன்னும், 10 நாட்களில் பணி ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்படும். அதன்பின், அடுத்த பல ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில், டாக்டர்கள் காலிப்பணியிடங்கள் இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.