உரிய டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டியில் பயணம் ரயில்களில் தொடரும் அவலம்
உரிய டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டியில் பயணம் ரயில்களில் தொடரும் அவலம்
ADDED : மே 06, 2025 09:57 PM
சென்னை:சமீப நாட்களாக, அனைத்து ரயில்களிலும் கூட்டம் அலைமோதுவதால், உரிய டிக்கெட் எடுக்காதவர்களும், முன்பதிவு பெட்டிகளில் ஏறி அமர்ந்து விடுகின்றனர்.
இதனால், முன்பதிவு செய்து பயணிப்போருக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. தற்போது, கோடை விடுமுறை துவங்கி உள்ளதால், தென்மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், சிலம்பு, பொதிகை, நெல்லை உள்ளிட்ட விரைவு ரயில்களில், இந்த பிரச்னை தொடர்கிறது.
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தென்மாவட்ட பயணியரின் தேவையை ஒப்பிடுகையில், தினசரி ரயில்கள் குறைவாகவே உள்ளன. கூடுதல் பெட்டிகள் இணைப்பு, சிறப்பு ரயில்கள் இயக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மேலும், நிரந்தர ரயில் சேவையை அதிகரிக்க, கூடுதல் பாதைகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
முன்பதிவு பெட்டிகளில், உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர் குறித்து, பயணியர் புகார் அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க, ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினர்.

