போர்ஷனில் இல்லாத கேள்வியால் பதிலளிக்க தலையை சொறிந்த எம்.பி.,
போர்ஷனில் இல்லாத கேள்வியால் பதிலளிக்க தலையை சொறிந்த எம்.பி.,
UPDATED : ஏப் 11, 2025 04:33 AM
ADDED : ஏப் 10, 2025 08:53 PM

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தி.மு.க., வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கல்யாணசுந்தரம், கும்பகோணம் பாலக்கரையில் உள்ள அவரது அலுவலகத்தில், பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.
அரசியல் ரீதியில் நிறைய கேள்விகள் கேட்டு, எம்.பி.,யை தினறடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, எம்.பி., அலுவலகத்துக்கு பத்திரிகையாளர்கள் சென்றனர். அங்கு சென்றதும், ஒவ்வொருக்கும் எம்.பி.,யின் உதவியாளர் ஒரு துண்டு சீட்டைக் கொடுத்தார்.
அதில், நான்கு கேள்விகள் அச்சிடப்பட்டிருந்தன. அந்த நான்கு கேள்விகளை மட்டும் தான் எம்.பி.,யிடம் கேட்க்க வேண்டும் என எம்.பி.,யின் உதவியாளர் பத்திரிகையாளர்களை கேட்டுக் கொண்டார்.
'கவர்னருக்கு எதிரினா உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சொல்லுங்கள். தமிழக கவர்னரின் அடாவடி போக்கு குறித்து உங்கள் எண்ணம் என்ன? மும்மொழி கொள்கையை தி.மு.க., ஏற்காததன் காரணம் என்ன? கவர்னர் நிறுத்திய 10 மசோதாக்களை உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளதே...' என, துண்டுச் சீட்டில் இருந்த கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க எம்.பி., தயாராக இருந்தார்.
ஆனால், அந்த கேள்விகளை கேட்க பத்திரிகையாளர்கள் யோசிக்க, ஆளும்கட்சி டி.வி., செய்தியாளர் மட்டும் கேள்விகளைக் கேட்க, அதற்கு எழுதி எடுத்து வந்த பதிலைப் படித்தார் எம்.பி.,
அவ்வளோதான் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்தது என சொல்லி விட்டு, எம்.பி., அங்கிருந்து கிளம்ப, மறித்த பத்திரிகையாளர்கள் சிலர், வரும் 2028ல் கும்பகோணத்தில் மகாமக விழா நடக்கவுள்ளது. அதற்காக மத்திய அரசிடம் உதவி கேட்டு ஏதும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதா? என, துண்டு சீட்டில் இடம் பெறாத கேள்விகளைக் கேட்டனர்.
அதனால் தலையைச் சொறிந்த எம்.பி., சமாளித்து ஏதோ பதில் சொல்லிவிட்டு, ''பத்திரிகையாளர்கள் தவறான செய்தி போடக்கூடாது. நீங்களாக கேட்ட கேள்விகளுக்கான பதிலை செய்தியாகப் போட வேண்டாம்,'' என, சொல்லி விட்டு, பத்திரிகையாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டார்.

