மாற்றி யோசிக்கிறது நகராட்சி நிர்வாகம் மாதத்தில் ஒரு வாரம் பிளாஸ்டிக் சேகரிப்பு
மாற்றி யோசிக்கிறது நகராட்சி நிர்வாகம் மாதத்தில் ஒரு வாரம் பிளாஸ்டிக் சேகரிப்பு
ADDED : நவ 06, 2024 10:47 PM
சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில், மாதத்தில் ஒரு வாரம் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்கான புதிய நடைமுறை, விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, திடக் கழிவு மேலாண்மை விதிகள், தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இதன்படி, வீடுகள், வணிக நிறுவனங்களில் உருவாகும் குப்பைகள், 'மக்கும், மக்காதது' என தரம் பிரிக்கப்படுகின்றன.
மக்கும் குப்பைகள், அந்தந்த பகுதிகளிலேயே உரமாக மாற்றப்படுகின்றன. மக்காத குப்பைகளில், பிளாஸ்டிக்கை தனியாக பிரித்து, மறுசுழற்சி செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இப்பகுதிகளிலிருந்து தினமும், 1,178 டன் பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
இவ்வாறு சேகரமாகும் பிளாஸ்டிக்குகளை, மறுசுழற்சிக்கு அனுப்பும் வரை, இருப்பு வைப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, நகராட்சி நிர்வாகும் புது நடைமுறையை பின்பற்ற ஆலோசித்து வருகிறது.
இதன்படி, இனி மாதத்திற்கு ஒரு வாரம், பிளாஸ்டிக்குகளை மட்டும் குடியிருப்புகளிலிருந்து சேகரித்து, நேராக மறுசுழற்சிக்கு அனுப்பலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சிறப்பு முகாம் போன்று, இத்திட்டத்தை செயல்படுத்த ஆராய்ந்து வருகிறோம். இது தொடர்பான புதிய வழிமுறைகள் வகுத்த பின், இந்த திட்டம் அமல்படுத்தப்படும்' என்றார்.