நிலத்தில் விழுந்து 5 அடி பள்ளத்தை ஏற்படுத்திய மர்ம பொருள்: எரிகல்தான் என உறுதியானது
நிலத்தில் விழுந்து 5 அடி பள்ளத்தை ஏற்படுத்திய மர்ம பொருள்: எரிகல்தான் என உறுதியானது
ADDED : மே 27, 2024 06:02 PM

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே நிலத்தில் திடீரென மர்ம பொருள் விழுந்து ஐந்து அடி அளவிற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டது. நிலத்தில் விழுந்து பள்ளத்தை ஏற்படுத்தியது எரிகல் தான் என மாவட்ட அறிவியல் அலுவலர்கள் உறுதிப்படுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் சொட்டை கவுண்டர் பகுதியில் ராஜி என்பவருடைய நிலத்தில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மர்மப் பொருள் ஒன்று விழுந்துள்ளது. அதன் காரணமாக சுமார் ஐந்து அடி அளவிலான பள்ளம் உருவாகியுள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்தபோது, பள்ளத்திலிருந்து அதிக வெப்ப அனல் வெளியானதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் தாசில்தார் அனந்தகிருஷ்ணன் மற்றும் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பள்ளத்தில் இருந்த மண் மற்றும் சாம்பலின் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
மேலும், இன்று மாவட்ட அறிவியல் அலுவலர்களும் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது நிலத்தில் விழுந்து பள்ளத்தை ஏற்படுத்தியது எரிகல்தான் என அவர்கள் உறுதிப்படுத்தினர்.

