சீமான் கட்சியில் அடுத்த 'விக்கெட்': சேலம் மேற்கு மா.செ., விலகல்
சீமான் கட்சியில் அடுத்த 'விக்கெட்': சேலம் மேற்கு மா.செ., விலகல்
ADDED : நவ 25, 2024 01:08 AM

சேலம்: நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலராக இருந்தவர் ஜெகதீஷ், 38; முனைவர் பட்டம் பெற்ற இவர், அடிப்படை உறுப்பினர் மற்றும் கட்சி பதவியில் இருந்து விலகுவதாக, சமூக வலைதளத்தில் நேற்று பதிவிட்டுஉள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது:
இதுவரை என்னோடு களமாடிய உண்மை நிர்வாகிகளுக்கு நன்றி. நான் மிகவும் நேசித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவது கடினமானதாக இருந்தாலும், கட்சியின் சமீபகால செயல்பாடு, குறிப்பாக உட்கட்டமைப்பில் கவனம் செலுத்தாதது வருத்தத்தை ஏற்படுத்தியது. அதனால் விலகல் முடிவுக்கு வந்தேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நம்மிடம் கூறுகையில், ''என்னைப் போன்று, 120க்கும் மேற்பட்ட மாவட்டச்செயலர்கள் கட்சியில் உள்ளனர்.
தேர்தலில் தனித்துத்தான் போட்டியிட வேண்டும் என அவர் முடிவெடுத்து அறிவிப்பதற்கு முன், எங்களைப் போன்றோரை அழைத்துப் பேசி கருத்துக் கேட்டிருக்கலாம். அதை செய்யவில்லை. தன்னிச்சையாகவே அறிவித்தார்.
''இதனால், போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியே கிடைத்தது. அதற்காக, நாங்கள் பட்ட பாடெல்லாம் வீணானது. தொடர்ந்தும், சீமானை நம்பி கட்சிக்காக உழைப்பு, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அதனால் வெளியேறுவது என முடிவெடுத்தேன்,'' என்றார்.
ஏற்கனவே சேலம் மாநகர், மாவட்ட செயலர் தங்கம், கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மாநகர் மாவட்ட செயலர் வைரம், மேட்டூர் நகர துணைத்தலைவர் ஜீவானந்தம் ராஜா உள்ளிட்டோர், கடந்த சில நாட்களாக தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
இவர்களைப் போல, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கட்சி நிர்வாகிகள், சீமான் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகும் சூழலில், தற்போது சேலம் மேற்கு மாவட்டச் செயலரும் விலகியது கட்சியினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.