'சமூக வானொலி நிலையங்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும்!'
'சமூக வானொலி நிலையங்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும்!'
UPDATED : பிப் 14, 2024 02:32 AM
ADDED : பிப் 14, 2024 01:53 AM

சென்னை: ''சமூக வானொலி மக்களுடன் நெருக்கமாக உள்ளது. குரலற்றவர்களின் குரலாக மட்டுமில்லாமல், பல தகவல்களை உள்ளூர் மொழிகளில் தருகிறது,'' என, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பேசினார்.
உலக வானொலி தினத்தை முன்னிட்டு, அண்ணா பல்கலையில், மண்டல சமூக வானொலி விழா என்னும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் பேசியதாவது:
வானொலியின் முக்கியத்துவத்தை மனதில் வைத்து, பிரதமர் மோடி, 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியை துவங்கி, மக்களுடன் உரையாடி வருகிறார். சமூக வானொலி, மக்களுடன் நெருக்கமாக உள்ளது. குரலற்றவர்களின் குரலாக மட்டுமில்லாமல், பல தகவல்களை உள்ளூர் மொழிகளில் தருகிறது.
வரும் 2047ல், 'வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற இலக்கை எட்டுவதில், மக்களின் பங்கேற்புக்கு, சமூக வானொலி முக்கிய பங்கு வகிக்கும். 2014ம் ஆண்டு வரை, நாட்டில் 140 ஆக இருந்த சமூக வானொலி நிலையங்களின் எண்ணிக்கை, இன்று 481 ஆக அதிகரித்துள்ளன.
தெற்கு மண்டலத்தில் மட்டும், 117 சமூக வானொலி நிலையங்கள் இயங்குகின்றன. சமூக வானொலி நிலையங்களை அமைப்பதற்கான விதிமுறைகளில், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதாவது, ஒரு அமைப்பு ஒன்றுக்கும் மேற்பட்ட வானொலி நிலையங்களைக் கொண்டிருக்கலாம். ஐந்து ஆண்டாக இருந்த உரிமம் காலம், 10 ஆண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏழு நிமிடங்களாக இருந்த விளம்பர நேரம், 10 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 10 வினாடிகளுக்கான விளம்பரக் கட்டணம், 52 ரூபாயிலிருந்து 74 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற மாற்றத்தின் காரணமாக, சமூக வானொலி நிலையங்களின் எண்ணிக்கை விரைவில் ஆயிரத்தைத் தாண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பேசியதாவது:
'நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்கள் கடைசி கிராமங்கள் அல்ல; அவை முதல் கிராமங்கள்' என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு ஏற்ப, கிராமங்களில் சமூக வானொலி நிலையங்களை செயல்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.
புதிதாக துார்தர்ஷனில் தமிழ் தொலைக்காட்சி துவக்கப்பட்டதால், உலகம் முழுதும் அதன் தாக்கம் அதிகரித்துள்ளது. மக்களின் விருப்பங்களுக்கேற்ப, அதில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், ஐ.ஐ.எம்.சி., மற்றும் பி.ஐ.பி., கூடுதல் தலைமை இயக்குனர் நிமிஷ் ரஸ்தோகி, அண்ணா பல்கலை பதிவாளர் பிரகாஷ், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சக அதிகாரி கவுரிசங்கர் கேசர்வாணி, பேராசிரியர் பிரமோத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

