ADDED : மார் 19, 2024 11:00 PM
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, மேலும் கூறியதாவது:
தமிழகத்தில், 68,144 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில், ஒரு ஓட்டுச்சாவடியில், 1,500 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால், துணை ஓட்டுச்சாவடி அமைக்க அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், புதிதாக, 176 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டதால், மொத்த ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, 68,320 ஆக உயர்ந்துள்ளது.
உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர், அதை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 13,556 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மேலும், 87 துப்பாக்கிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 11,828 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10,434 பேரிடம் உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டுள்ளது. பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட, 293 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, சட்டசபை தொகுதி வாரியாக பிரிக்கும் பணி இன்று, அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

