கிழடு தட்டிப்போன அரசு நிர்வாகம் இந்திய கம்யூ., எம்.பி., விமர்சனம்
கிழடு தட்டிப்போன அரசு நிர்வாகம் இந்திய கம்யூ., எம்.பி., விமர்சனம்
ADDED : ஆக 10, 2025 06:17 AM
திருப்பூர்: இந்திய கம்யூ., கட்சியைச் சேர்ந்த திருப்பூர் எம்.பி., சுப்பராயன் நேற்று அளித்த பேட்டி:
கிராமங்களில் உள்ள பாறைக்குழிகளில் குப்பை கொட்ட அனுமதிக்கப்படாததால், திருப்பூர் மாநகரில் 10 நாளில், 10,000 டன் குப்பை தேங்கியுள்ளன. கடும் துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
கடந்த மே மாதம் 28ம் தேதி, 'சிறப்பு நிபுணர் குழுவை திருப்பூருக்கு அனுப்பி , ஆய்வு செய்து நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்' என முதல்வருக்கு கடிதம் அனுப்பினேன்.
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முதல்வர் அலுவலகத்தில் இருந்து அடுத்த ஒரு வாரத்தில், நகராட்சி துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மீண்டும் முதல்வருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பினேன்.
முதல்வரின் உத்தரவுக்கு துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. 'கிழடு தட்டிப்போன நிர்வாகம்' என்ற நிலையில் தான் அதிகாரிகளின் செயல்பாடு உள்ளது.
இதேபோன்று தான், மக்களிடம் இருந்து நான் வாங்கும் மனுக்கள் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கிறேன்; நடவடிக்கை எடுப்பதில்லை.
திருப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் தேர்வு செய்து, நகர் முழுக்க தேங்கியுள்ள குப்பையை அங்கு கொட்டி, நவீன தொழில்நுட்ப உபகரணங்களின் உதவியுடன் முழுமையாக அப்புறப்படுத்துவதோடு, நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆடை ஏற்றுமதி பாதிக்கும் அமெரிக்காவின், 50 சதவீத வரி விதிப்பால், சிறு, குறு, நடுத்தர தொழில் கடுமையாக பாதிக்கும். குறிப்பாக, நம் நாட்டின் ஜவுளி வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். ஆயத்த ஆடை ஏற்றுமதி பாதிக்கும்; பனியன் தொழில் முடங்கும். இது, இந்தியாவுக்கெதிரான வர்த்தக போர் மட்டுமல்ல; வளரும் நாடுகளின் இயற்கை வளங்களை மலிவான விலையில் கொள்ளையடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டம். சுப்பராயன், எம்.பி., - இந்திய கம்யூ.,