அறிவுஜீவியாக அறிக்கை வெளியிடும் பழனிசாமி: ஸ்டாலின் கடும் தாக்கு
அறிவுஜீவியாக அறிக்கை வெளியிடும் பழனிசாமி: ஸ்டாலின் கடும் தாக்கு
ADDED : ஆக 10, 2025 06:18 AM

சென்னை : ''வளர்ச்சியின் அளவீடு என்பது, பொருளாதார அளவுகோல் தான். இந்த அடிப்படை கூட தெரியாமல் அறிவுஜீவி மாதிரி, அறிக்கை வெளியிடுகிறார் பழனிசாமி, தமிழக மக்களின் ஆதரவோடு எங்கள் பயணம் தொடரும்,'' என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை, தாம்பரத்தில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தும் பொதுமக்களுக்கு பட்டா வழங்கியும், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய, மாநில கல்வி கொள்கையை வெளியிட்டுள்ளேன். கல்வியும், மருத்துவமும் தான், தி.மு.க., அரசின், இரு கண்கள்.
மனிதனின் அடிப்படை தேவை என்பது, உணவு, உடை, இருப்பிடம். மூன்றில் இருப்பிடம் எளிதாக கிடைக்காது. நிலம் தான் அதிகா ரம். காலுக்கு கீழ் சிறிது நிலமும், தலைக்கு மேல் ஒரு கூரையும், பலருக்கு கனவாக உள்ளது. அதனால் தான், பட்டா வழங்குவதில் எப்போதும் தனி கவனம் செலுத்துகிறேன்.
ஏற்றத்தாழ்வற்ற, சமத்துவ சமுதாயத்தை கட்டமைக்க, சொந்த வீடு இல்லாத, நிலமற்ற ஏழை குடும்பங்களையும், பெண்களையும் முன்னிலைப்படுத்தி, இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதை தி.மு.க., அரசு கொள்கையாக கொண்டுள்ளது.
தி.மு.க., அரசு, 2021 முதல் 2024 டிசம்பர் வரை, 10,26,736 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது. இன்னும் நிறைய பேருக்கு, இலவச வீட்டுமனை பட்டா கிடைக்க வேண்டும் என்று, ஐந்து மாதங்களில், 5 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், ஐந்து மாதங்களில், 7,27,606 பேருக்கு பட்டா கிடைத்துள்ளது. மொத்தத்தில், 17 லட்சம் பேருக்கும் மேல் பட்டா வழங்கப்பட்டுள்ளது. பல லட்சம் குடும்பங்களின் கனவுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தொழில் நிறுவனங்களை கொண்டு வந்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கியதால், 11.19 சதவீத பொருளாதார வளர்ச்சி பெற்று, தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது. நாட்டில் எந்த மாநிலத்திலும் இவ்வளவு வளர்ச்சி இல்லை.
கடந்த ௧௦ ஆண்டுகள் பின்னோக்கி சென்ற தமிழகத்தை, நான்கு ஆண்டுகளில் மீட்டெடுத்து, வளர்ச்சிப் பாதையின் உச்சத்திற்கு கொண்டு போயிருக்கிறோம். இதை பொறுத்துக்கொள்ள முடியாத, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, மோடி அரசு கொடுத்த புள்ளிவிபரத்தையே தவறு என்கிறார்.
வளர்ச்சியின் அளவீடு என்பது, பொருளாதார அளவுகோல் தான். இந்த அடிப்படை கூட தெரியாமல் அறிவுஜீவி மாதிரி, அறிக்கை வெளியிடுகிறார் பழனிசாமி. இந்திய அளவில், பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை, மற்ற மாநிலங்களின் முதல்வர்கள் சாதிக்க முடியாததை, இந்த ஸ்டாலின் சாதிக்கிறான் என்ற வயிற்றெரிச்சல் தான், அவர் விமர்சிப்பதற்கான காரணம். இவ்வாறு அவர் பேசினார்.