ADDED : டிச 18, 2024 01:02 AM

சென்னை:''பட்டிதொட்டி எல்லாம் செஸ் விளையாட்டை அறிமுகம் செய்துள்ளார் குகேஷ்,'' என, துணை முதல்வர் உதயநிதி பேசினார். அவர் மேலும் கூறியதாவது:
நாட்டிலேயே செஸ் என்றால் சென்னை என்ற புகழ் குகேஷ் போன்ற வீரர்களால் கிடைத்துள்ளது. தன் 11வது வயதில், ஜூனியர் உலக செஸ் சாம்பியன் பட்டத்தையும், 18வது வயதில் சீனியர் உலக செஸ் சாம்பியன் பட்டத்தையும் பெற்று, உலகின் இளம் வயது சாம்பியனாகி, நமக்கெல்லாம் புகழை ஈட்டித் தந்துள்ளார்.
குகேஷ் ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெறும் போதும், தமிழக அரசு ஊக்கத்தொகை அளித்து, அவரை ஊக்கப்படுத்தியது. இந்த வெற்றியால், பட்டிதொட்டிக்கு எல்லாம் செஸ் விளையாட்டை அறிமுகம் செய்துள்ளார். இனி, கிராமங்களில் இருந்தும் சாம்பியன்கள் உருவாக இது உதவும்.
இவ்வாறு உதயநிதி பேசினார்.
முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பேசியதாவது:
நான், 30 ஆண்டுகளுக்கு முன் உலக செஸ் சாம்பியன் ஆனபோது அன்றைய முதல்வர் கருணாநிதி பாராட்டு விழா நடத்தி, உற்சாகப்படுத்தினார். இன்று அதேபோல், குகேஷ் இளம் வயது சாம்பியனாகி, முதல்வர் ஸ்டாலின் பாராட்டு விழா நடத்துகிறார். இது மகிழ்ச்சியான அனுபவம்.
திறமை மட்டுமின்றி, அர்ப்பணிப்பு உணர்வு, நினைவுத்திறன், ஒருநிலைத்தன்மை உள்ளிட்டவற்றால் குகேஷ் இந்த வெற்றியை பெற்றுள்ளார். வென்ற்றாலும், தோற்றாலும் திறந்த மனதோடு அதன் பின்னணியை ஊடகர்களுக்கு விளக்குகிறார்.
தோல்வியில் துவளாமல் அடுத்த போட்டிக்கு தயாராகிறார். இந்த குணம், என்னை ஈர்க்கிறது. இது ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் அவசியம் இருக்க வேண்டிய குணம். உலகின் செஸ் தலைநகரமாக தமிழகம் உருவாகும் காலம் தொலைவில் இல்லை.
இவ்வாறு ஆனந்த் பேசினார்.