மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் திறப்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மக்கள் வழிபாடு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் திறப்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மக்கள் வழிபாடு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
ADDED : ஏப் 18, 2025 03:10 AM

விழுப்புரம்,:விழுப்புரம் அருகே மூடப்பட்ட மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில், நீதிமன்ற உத்தரவுபடி நேற்று திறக்கப்பட்டு, பொது வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது. இதனிடையே ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அருகே மேல்பாதி தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த 2023ம் மே மாதத்தில் நடந்த தீமிதி திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறு காரணமாக, கோவிலில் வழிபடுவது தொடர்பாக இரு சமுக மக்களிடையே மோதல் ஏற்பட்டது.
இதனால், கடந்த 7.6.2023ம் தேதி, ஆர்.டி.ஓ., முன்னிலையில் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பொது மக்கள் செல்ல தடை உத்தரவும் போடப்பட்டது. ஓராண்டுக்கும் மேலாக மூடியுள்ள கோவிலை மீண்டும் திறக்க வேண்டும் என, கோவிலை நிர்வகித்து வரும் ஒரு தரப்பினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
விசாரித்த உயர் நீதிமன்றம், கோவிலை திறந்து, பொது மக்களை அனுமதிக்காமல், ஒரு கால பூஜையை மட்டும் நடத்த உத்தரவிட்டது. இதனால், கடந்த 22.3.2024ம் தேதி கோவில் திறக்கப்பட்டு, தனி அர்ச்சகர் ஒருவர் நியமித்து, ஒரு கால பூஜை மட்டும் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்றம், விழுப்புரம் ஆர்.டி.ஓ., போட்ட 145 தடை உத்தரவை ரத்து செய்தும், கோவிலை திறந்து, அனைத்து சமுதாயத்தினரும் தடையின்றி வழிபட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து, விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கடந்த மார்ச் 19, 21ம் ஆகிய தேதிகளில், அக்கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடந்தது. அப்போது, இரு தரப்பினரும் கோவிலை திறந்து வழிபடுவதற்கும், கோர்ட் உத்தரவை பின்பற்றி நடந்துகொள்வதாகவும் உறுதியளித்தனர்.
இதனையடுத்து, கோவில் வளாகத்தை துாய்மைபடுத்தி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த பிறகு கோவில் திறக்கப்படும் என, ஆர்.டி.ஓ., முருகேசன் தெரிவித்தார். தொடர்ந்து, கோவில் வளாகம் துாய்மைபடுத்தப்பட்டு, கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் 20 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த ஏற்பாடுகள் நடந்தது.
போலீஸ் பாதுகாப்புடன்
இதனையடுத்து, 17ம் தேதி கோவிலை திறந்து அனைத்து தரப்பு மக்களும் வழிபடுதவற்கான ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. அதன்படி, நேற்று காலை 5:30 மணிக்கு ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில், தாசில்தார்கள் யுவராஜ், வேல்முருகன் உள்ளிட்ட அலுவலர்கள் முன்னிலையில் கோவில் திறக்கப்பட்டு, பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்தது.
கோவில் அர்ச்சகர் ஐயப்பன், மூலவர் திரவுபதி அம்மனுக்கு அபிஷேகம் செய்து, ஆராதனை செய்தார். 6:25 மணிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முதலில் அந்த கோவில் பகுதியை சேர்ந்தவர்களும், அலுவலர்களும் வழிபட்டனர். தொடர்ந்து, மற்றொரு தரப்பைச் சேர்ந்த மக்கள் 75 பேர், போலீஸ் பாதுகாப்புடன் வந்து கோவிலில் வழிபட்டனர். 22 மாதங்களுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி.,க்கள் திருமால், தினகரன், ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் தலைமையில், கோவில் வளாகத்தை சுற்றிலும் 200க்கும் மேற்பட்ட போலீசாரும், கிராமத்தை சுற்றிலும் என மொத்தம் 750 போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த கோவிலின் நடைமுறைப்படி, நேற்று காலை, ஒரு கால பூஜைக்காக காலை 6.00 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு, காலை 7.30 மணிக்கு பூஜைகள் முடித்து, கோவில் நடை சாத்தப்பட்டது. தொடர்ந்து, தினசரி காலை ஒரு கால பூஜையும், வெள்ளிக்கிழமை மட்டும் காலை, மாலை என இரண்டு கால பூஜையும் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. காலை 7:45 மணிக்கு கோவில் மூடப்பட்டது.