ADDED : டிச 08, 2025 05:57 AM

''போலி ஆவணம் சமர்ப்பித்து, தேர்தல் கமிஷனை, அன்புமணி தவறாக வழி நடத்தி உள்ளார்' என, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் கோபு தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
'அங்கீகரிக்கப்படாத கட்சிகளின், உள்கட்சி விவகாரங்களில் தலையிட்டு, எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க, தேர்தல் கமிஷனுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை' என, டில்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, வழக்கறிஞர் பாலு பொய் கூறுகிறார்.
தேர்தல் நேரத்தில், ஒரு கட்சியை சேர்ந்த இரண்டு தரப்பினர், ஒரே சின்னத்தை கோரினால், அந்த சின்னத்தை முடக்கும் அதிகாரம் தேர்தல் கமிஷனுக்கு உண்டு.
அதேநேரம், ஒரு கட்சியின் தலைவர் இவர்தான் என்பதை சொல்லும் அதிகாரம், தேர்தல் கமிஷனுக்கு கிடையாது.
அன்புமணியின் தலைவர் பதவிக்காலம், கடந்த மே மாதம் முடிவடைந்துள்ளது. ஆனால், 2026 வரை பதவிக்காலம் இருப்பதாக, போலி ஆவணத்தை தேர்தல் கமிஷனில் சமர்ப்பித்துள்ளனர்.
அதேபோல், நீதிமன்றத்தையும் தவறாக வழிநடத்தி உள்ளனர். இது குறித்து, ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் முறையிடுவோம்.
டில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, இன்றைய காலகட்டத்தில், பா.ம.க.,வுக்கு தலைவர் என யாரும் கிடையாது. தேர்தல் நேரத்தில், 'ஏ, பி' படிவம் விவகாரத்தில் பிரச்னை எழுந்தால், உரிமையியல் நீதி மன்றத்தை நாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

