ADDED : மார் 06, 2024 11:30 PM

முதல்வர் ஸ்டாலின் நேற்று தமிழக அரசு திட்டங்களால் பயனடைந்தவர்களை தொடர்பு கொண்டு, கருத்துக்களை கேட்க, 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை துவக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, 'நாங்க நலமா இல்லை ஸ்டாலின்' என்ற தலைப்பில், அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியினர், அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு, தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை பதிவிட்டனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை குறிப்பிட்டு, 'தமிழக முதல்வரே நாங்கள் நலமாக இல்லை' என்று கூறியுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: நீங்கள் நலமா என்று கேட்கும் முதல்வரே, நலத் திட்டங்கள் நின்று போச்சு; சட்டம் -- ஒழுங்கு சீர்கெட்டு போச்சு; சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் உயர்ந்தாச்சு; விலைவாசி விண்ணை தொட்டாச்சு.
எங்கு காணினும் போதைப் பொருள் புழக்கம் என்ற அவல நிலைக்கு தமிழகம் ஆளாச்சு. இப்படி வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்ட உங்கள் விடியா ஆட்சியில், மக்கள் நலமாக இல்லை.
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தமிழக மக்களின் குறைகளையும், மனக் குமுறல்களையும், எந்த வகையிலும் நிவர்த்தி செய்ய முடியாத, தி.மு.க., அரசால் விளம்பரத்திற்காக துவக்கப்பட்டிருக்கும், 'நீங்கள் நலமா' திட்டம் வேடிக்கையானது; வெட்கக்கேடானது.
ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட நல்ல பல திட்டங்களை முடக்கியதோடு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றும் தி.மு.க.,வுக்கு ஏன் ஓட்டளித்தோம் என மக்கள் வருந்துகின்றனர். தமிழக மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், தி.மு.க., அரசின் இந்த திட்டம் அமைந்துள்ளது.
பன்னீர்செல்வம் அணி கொள்கை பரப்பு செயலர் மருது அழகுராஜ்: 'நீங்க நலமா, நமக்கு நாமே' என்றெல்லாம், விதவிதமாக பேரு வைக்கிற, பேரு போன தி.மு.க., ஆட்சியில், மணல் விக்கிறவன், மதுக்கூடம் நடத்துறவன், போதை மருந்து கடத்துறவன், கூலிக்கு ஆட்களை போட்டுத் தள்ளுறவன், இவர்களிடம் பிடுங்கி திங்கிறவன் மட்டும் தான் நலமாக இருக்கான். மத்தபடி செந்தில் பாலாஜி, பொன்முடி வரைக்கும் யாரும் நலமா இல்லை.
'சம வேலைக்கு சம ஊதியம்' வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கூறியதாவது: ஒரே கல்வித் தகுதி, ஒரே பணிக்கு, 14 ஆண்டுகளாக இருவேறு ஊதியங்கள் பெற்று வருகிறோம். 20,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை வலியுறுத்தி துவங்கிய போராட்டத்தில் இதுவரை, 17,000 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களில், இரவு வரை அடைத்து வைக்கின்றனர். தற்போது தமிழகம் முழுதும் அரசு திட்டங்களால் பயன் பெற்றவர்களுக்கு அலைபேசியில் அழைத்து, 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை துவக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
ஆனால், 17 நாட்களாக சென்னையில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராடும் நிகழ்வு வைரலாகிறது. எங்கள் நலன் குறித்தும் முதல்வர் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

