இ.சி.ஆர்., சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்: ஆர்.எஸ்.பாரதி
இ.சி.ஆர்., சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்: ஆர்.எஸ்.பாரதி
ADDED : பிப் 01, 2025 08:46 PM
சென்னை:பெண்களை அச்சுறுத்திய சம்பவத்தில், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது பேட்டி:
தி.மு.க., ஆட்சியில், குற்றங்கள் நடந்தால் துரிதமான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன், சென்னை கிழக்கு கடற்கரை சாலையான இ.சி.ஆரில், பெண்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவத்தை, தி.மு.க.,வுடன் தொடர்புபடுத்தி, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியுள்ளார். 'குற்ற செயல்களில் ஈடுபட, தி.மு.க., கொடி உள்ள கார் லைசென்சா?' என, கேட்டுள்ளார்.
இ.சி.ஆரில் பெண்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவத்தில், கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளியான சந்துரு, அ.திமு.க.,வை சேர்ந்தவர். அவரின் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மற்றொரு கார், நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., செயலரின் சகோதர் மகனுக்கு சொந்தமானது. இவர்கள் அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள். இவர்கள் செய்யும் குற்றத்துக்கு, தி.மு.க., மீது பழி போட்டு வருகிறார் பழனிசாமி.
சென்னை, அண்ணா நகரில் சிறுமிக்கு பாலியில் தொல்லை அளித்த சம்பவத்திலும், ஆம்பூரில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவத்திலும், அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படி தமிழகத்தில் நடந்து வரும் குற்ற சம்பங்களில் சம்பந்தப்பட்டவர்கள் அ.தி.மு.க.,வினர். மக்கள் மத்தியில், தி.மு.க.,வுக்கு உள்ள செல்வாக்கை திசை திருப்பவே, தி.மு.க., கொடியை பயன்படுத்தி, மாறுவேடத்தில் ஊடுருவி, தீயசெயலில் ஈடுபட, அ.தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனரா என்ற சந்தேகம் வலுக்கிறது.
இதில் அ.தி.மு.க.,வினர் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்பதை, தனி குழு அமைத்து, காவல் துறை விசாரிக்க வேண்டும்.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஆதாரம் இருந்தால், காவல் துறையிடம் சொல்லியிருக்க வேண்டும். இவ்வளவு நாள் மறைப்பது பெரிய குற்றம். உண்மை குற்றவாளிகளை தப்பிக்க வைக்கிறாரா என்ற சந்தேகமும் எனக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

