ஜாபர் வழக்கை விசாரித்தவர் என்.சி.பி.,யில் இருந்து நீக்கம்
ஜாபர் வழக்கை விசாரித்தவர் என்.சி.பி.,யில் இருந்து நீக்கம்
ADDED : டிச 25, 2024 01:09 AM

சென்னை:ஜாபர் சாதிக் தொடர்புடைய, போதைப் பொருள் கடத்தல் வழக்கை விசாரித்து வந்த, என்.சி.பி., தலைமை துணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங், அப்பொறுப்பில் இருந்து திரும்ப பெறப்பட்டுள்ளார்.
சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்த, சென்னையைச் சேர்ந்த, முன்னாள் தி.மு.க., நிர்வாகி ஜாபர் சாதிக், கடந்த மார்ச் 9ல், என்.சி.பி., எனப்படும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால், டில்லியில் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக, டில்லியில் ஐ.பி.எஸ்., அதிகாரியான, என்.சி.பி., துணை இயக்குனர் ஞானேஸ்வர் சிங் பேட்டி அளித்தார். அப்போது அவர், ஜாபர் சாதிக் விவகாரத்தில், அரசியல் உள்நோக்கத்துடன், பரபரப்பு மற்றும் புகழுக்காக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நிறைய தகவல்களை மறைத்து விட்டதாகவும் கூறப்பட்டது.
ஜாபர் சாதிக் மீதான வழக்கு விசாரணையிலும், சரியான நடைமுறைகளை பின்பற்றவில்லை என, அவர் மீது சந்தேக பார்வையும் விழுந்தது.
இது தொடர்பாக, அவர் மீது, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் என்.சி.பி., தலைமை இயக்கனரிடமும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஞானேஸ்வர் சிங் செயல்பாடுகள் மற்றும் வழக்கை அவர் விசாரித்த விதம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, என்.சி.பி., மேற்கு மண்டல தலைமை துணை இயக்குனர் மணீஷ்குமாருக்கு உத்தரவிடப்பட்டது.
அதையடுத்து, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த விஜிலன்ஸ் பொறுப்பில் இருந்து ஞானேஸ்வர் சிங் நீக்கப்பட்டார். தற்போது அவரை, மத்திய உள்துறை அமைச்சகம், என்.சி.பி.,யில் இருந்து திரும்ப பெற்றுள்ளது. அவருக்கு புதிய பொறுப்பும் வழங்கப்படவில்லை.

