ADDED : மார் 04, 2024 02:36 AM

தென்காசி : தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே கொக்குக்குளத்தைச் சேர்ந்தவர் ராமலட்சுமி. இவரது கணவர் சதீஸ்வரன், 36. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலைச் சேர்ந்தவர்.
சதீஸ்வரன், பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர். அவர் மனைவி ஊரான கொக்குக்குளத்தில், ஆறு மாதங்களாக தங்கியிருந்து, ஓட்டு வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை 9:00 மணிக்கு வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்த போது, வெடி மருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அவர் உடல் சிதறி பலியானார்.
வெளியே நின்ற அவர் மனைவிக்கு காயம் ஏற்பட்டு, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது வீடு தரை மட்டமானது.
வேறு யாரும் அங்கில்லை. அருகில், 20க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதமடைந்தன. தென்காசி கலெக்டர் கமல்கிஷோர், எஸ்.பி., சுரேஷ்குமார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அய்யாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

