தனியார் பள்ளிக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் மர்ம நபரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
தனியார் பள்ளிக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் மர்ம நபரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
ADDED : மார் 05, 2024 07:26 AM
சென்னை, கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு, 'இ - மெயில்' வாயிலாக அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால், பெற்றோரிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
சென்னையில், பிப்.,8 காலை, 10:00 மணியில் இருந்து, மாலை, 3:40 மணி வரை, நந்தம்பாக்கம், அண்ணா நகர், கோபாலபுரம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும், 13 தனியார் பள்ளிகளுக்கு, 'இ - மெயில்' வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து, கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் கூறுகையில், 'வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்து விடுவோம்' என, கூறினார். ஆனால், அந்த நபரை நெருங்க கூட முடியவில்லை.
முதற்கட்ட விசாரணையில், சுவிட்சர்லாந்து நாட்டில் செயல்படும் நிறுவனத்தின் இ - மெயில் சேவையை பயன்படுத்தி, மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது;
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் பெல்ஜியம் நாட்டில் பதுங்கி இருப்பதாகவும் கூறினர்.
ஆனால், வெடிகுண்டு மிரட்டல் வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், சென்னை, கோவையில் செயல்படும் பிரபல தனியார் பள்ளிகளுக்கு, மீண்டும் மீண்டும் இ - மெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் அருகே கெருகம்பாக்கத்தில், பத்மா சேஷாத்ரி பாலபவன் என்ற சி.பி.எஸ்.இ., பள்ளி இயங்குகிறது. இப்பள்ளி அலுவலகத்திற்கு, மார்ச் 1ல், 'இ -மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
ஆவடியில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் பள்ளி வளாகம், வாகனங்களைச் சோதனை செய்தனர். புரளி என, தெரியவந்தது.
நேற்று காலை இரண்டாவது முறையாக, இதே பள்ளிக்கு இ- மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தகவல் அறிந்து பள்ளி முன் பெற்றோர் குவிந்தனர்.
மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் புரளி என, தெரியவந்தது.
அதேபோல, கோவை வடவள்ளி அருகே, சோமையம்பாளையம் பகுதியில் உள்ள, பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளிக்கு நேற்று முன் தினம் இரவு, இ - மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
அதிகாலை 2:00 மணி வரை, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை செய்ததில் புரளி என, தெரியவந்தது. இந்த பள்ளியை குறி வைத்து மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால், சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிட ஆலோசனை செய்து வருவதாக, டி.ஜி.பி., அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் குழு -

