'போலீசார் கொல்ல பார்க்கின்றனர்' ரவுடி நாகேந்திரன் கதறல்
'போலீசார் கொல்ல பார்க்கின்றனர்' ரவுடி நாகேந்திரன் கதறல்
ADDED : டிச 13, 2024 01:30 AM
சென்னை:'ஆம்ஸ்ட்ராங்கை நான் ஏன் கொலை செய்யப்போகிறேன். சிறையில் வைத்தே என்னை போலீசார் கொல்லப் பார்க்கின்றனர்' என, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், ரவுடி நாகேந்திரன் கதறினார்.
சென்னை பெரம்பூரில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில், பொன்னை பாலு, ரவுடி நாகேந்திரன் உள்ளிட்ட 28 பேரை, போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் திருவேங்கடம் என்பவர், போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரவுடி நாகேந்திரன் உள்பட 27 பேரும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், வழக்கறிஞர் நியமிக்க அவகாசம் வழங்கிய நீதிபதி, விசாரணையை வரும், 20ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
அப்போது, ரவுடி நாகேந்திரன், 'வேலுார் சிறையில் இருந்து வருகிறேன். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதால், நீண்ட துாரம் பயணிக்க முடியவில்லை. ஒரே சமூகத்தை சேர்ந்த ஆம்ஸ்ட்ராங்கை, நான் ஏன் கொலை செய்யப்போகிறேன். நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் என்னை, சிறையில் வைத்தே போலீசார் கொல்லப் பார்க்கின்றனர்' என, நீதிபதியிடம் கதறினார்.
அதை கேட்ட நீதிபதி, ''நீதிமன்றத்தில் இதுபோல உணர்ச்சி பூர்வமாக பேச வேண்டாம். வழக்கு விசாரணை நியாயமான முறையில் நடத்தப்படும்,'' என்றார்.
பின், 'வழக்கில் சாட்சிகள் விசாரணை துவங்கிய பின், நாகேந்திரனை சிறை மாற்றம் செய்வது தொடர்பாக பரிசீலிக்கப்படும்' என, தெரிவித்து, அன்றைய தினம் வரை அனைவரின் காவலையும் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.