விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்த கூடாது: ஐகோர்ட்
விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்த கூடாது: ஐகோர்ட்
UPDATED : பிப் 20, 2025 05:39 AM
ADDED : பிப் 20, 2025 01:27 AM

சென்னை:'விசாரணை என்ற பெயரில், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள், பொது மக்களை, போலீசார் துன்புறுத்துவதைத் தடுக்காமல், கண்ணை மூடிக் கொண்டு இருக்க முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை, நந்தம்பாக்கம் போலீசில், ஜிதேந்திரா என்பவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்படி, விசாரணை என்ற பெயரில், நந்தம்பாக்கம் போலீசார் தன்னை கொடுமை செய்கின்றனர்.
எனவே, தன்னை தொந்தரவு செய்யக் கூடாது என, போலீஸ் கமிஷனர், நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிடுமாறு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
விசாரணை என்ற பெயரில், தன்னை போலீசார் துன்புறுத்துவதாக, மனுதாரர் கூறியுள்ளார்.
பி.என்.எஸ்.எஸ்., எனும் பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா சட்ட பிரிவு 528ன் படி, இந்த நீதிமன்றம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார். ஒரு குற்ற புகார் என்றால், அது குறித்து போலீசாருக்கு விசாரணை நடத்த முழு அதிகாரம் உள்ளது.
ஆனால், அந்த அதிகாரத்தை, பி.என்.எஸ்.எஸ்., சட்ட பிரிவின் கீழ்தான் பயன்படுத்த வேண்டும்.
அந்த சட்டம், போலீஸ் விசாரணையில் இருந்து, இதுபோன்ற நபர்களை பாதுகாக்கும் அதிகாரத்தை, மாஜிஸ்திரேட்டுக்கு வழங்கியுள்ளது.
அதே நேரம் புலன் விசாரணையில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. ஆனால், இதுபோல ஏராளமான மனுக்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன.
எனவே, விசாரணை என்ற பெயரில் போலீசார் செய்யும் கொடுமையை, இந்த நீதிமன்றம் கண்டுகொள்ளாமலும், தடுக்காமலும் கண்களை மூடிக் கொண்டு இருக்க முடியாது.
ஒரு குற்றப் புகாரில் சம்பந்தப்பட்ட நபரை அல்லது சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு, 'சம்மன்' அனுப்ப வேண்டும்.
அதில், எப்போது விசாரணைக்கு வர வேண்டும்; தேதி, நேரம் போன்றவற்றை போலீசார் குறிப்பிட வேண்டும்.
அவ்வாறு நடத்தப்படும் விசாரணையின்போது, பதிவு செய்யப்படும் வாக்குமூலத்தை, வழக்கு விசாரணை டைரியில் குறிப்பிட வேண்டும்.
விசாரணை என்ற பெயரில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை, போலீசார் துன்புறுத்தக் கூடாது.
வழக்குப் பதிவு மற்றும் துவக்க விசாரணை தொடர்பாக, உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள விதிமுறைகளை, போலீசார் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.