'தி.மு.க., எதிர் த.வெ.க.,' என மாறிய அரசியல் களம்; இந்த நிலைக்கு தள்ளியது அ.தி.மு.க., நிலைப்பாடா?
'தி.மு.க., எதிர் த.வெ.க.,' என மாறிய அரசியல் களம்; இந்த நிலைக்கு தள்ளியது அ.தி.மு.க., நிலைப்பாடா?
UPDATED : செப் 23, 2025 05:31 AM
ADDED : செப் 23, 2025 04:13 AM

தமிழக தேர்தல் களம், 'தி.மு.க., எதிர் த.வெ.க.,' என மாறியுள்ளது. அதற்கு அ.தி.மு.க.,வின் நிலைப்பாடே காரணம் என, அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த 1957 முதல் 1977 வரை, 20 ஆண்டுகள், தமிழக தேர்தல் களம், 'தி.மு.க., எதிர் காங்கிரஸ்' என, இருந்தது. தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., - அ.தி.மு.க.,வை துவங்கிய பின், கடந்த 1977 முதல் 48 ஆண்டுகளாக, தமிழக அரசியல் களம் என்பது, தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இடையிலான போட்டி களமாகவே இருந்து வருகிறது.
கடந்த 1989ல் நான்கு முனை போட்டியில், 12 ஆண்டுகளுக்கு பின், ஆட்சியை தி.மு.க., கைப்பற்றினாலும், அ.தி.மு.க.,வின் ஒரு பிரிவான ஜெயலலிதா அணிதான் பிரதான எதிர்க்கட்சியானது.
கடந்த 2016ல் ஜெயலலிதா மறைவுக்குப் பின், 2019, 2024 லோக்சபா, 2021 சட்டசபை, உள்ளாட்சி தேர்தல் என, அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க., தோல்வி அடைந்தது.
இதனால், அக்கட்சி தொடர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் தனியாக பிரிந்திருப்பதும், அக்கட்சியின் வெற்றியை கேள்விக்குறியாக்கி உள்ளது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையில் தனி அணி அமைத்து, தோல்வி அடைந்த பழனிசாமி, வரும் சட்டசபை தேர்தலுக்காக, கடந்த ஏப்ரல் 11ல், பா.ஜ.,வுடன் கூட்டணி அறிவித்தார்.
ஆனால், ஐந்து மாதங்கள் கடந்தும், இந்தக் கூட்டணியில் வேறு கட்சிகள் சேரவில்லை. அதே நேரத்தில், 10 கட்சிகள் கொண்ட தி.மு.க., கூட்டணி அப்படியே உள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தனது பிரசார பயணத்தை துவங்கியுள்ளார். இதுவரை திருச்சி, அரியலுார், நாகை, திருவாரூர் ஆகிய இடங்களுக்கு சென்ற அவருக்கு, திரண்ட மக்கள் கூட்டம், மற்ற கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்க்கு கூடும் கூட்டம், ஓட்டாக மாறினால், அவர் கூறுவது போல, வரும் 2026 தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என, பலரும் கூறுகின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 21ல், மதுரையில் நடந்த த.வெ.க., மாநாட்டில் பேசிய விஜய், 'வரும் தேர்தலில் தி.மு.க., -- த.வெ.க., இடையே தான் போட்டி' என்றார். கடந்த 20ம் தேதி, நாகை கூட்டத்திலும், இதையே மீண்டும் தெரிவித்தார்.
நாகை, திருவாரூர் கூட்டங்களில் பேசிய விஜய், 'வெளிநாட்டு முதலீடா; வெளிநாட்டில் முதலீடா?' என, முதல்வர் ஸ்டாலினை நேரடியாகவே விமர்சித்தார்.
செல்லும் இடங்களில் எல்லாம், ஸ்டாலின், அவரது குடும்பம் மற்றும் தி.மு.க., அரசின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விஜய் விமர்சிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வரை, விஜய் கருத்துக்களுக்கு, பதில் அளிக்காமல் கடந்து சென்ற தி.மு.க., தரப்பு, தற்போது விஜய் விமர்சனத்துக்கு உடனுக்குடன் பதில் அளிக்கிறது.
இதனால், தி.மு.க., எதிர் அ.தி.மு.க., என இருந்த அரசியல் களம், தற்போது, தி.மு.க., எதிர் த.வெ.க., என மாறி உள்ளது. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வின் பிரசாரம் எடுபடாமல் போய் உள்ளது.
இது குறித்து தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
அ.தி.மு.க., கூட்டணியில் பெரும் நெருக்கடியும் நெருடலும் உள்ளது. அதிலிருந்து மீண்டு, கூட்டணியை வலுப்படுத்துவது என்பது எளிதான காரியமல்ல. இதனால், பலவீனப்பட்டிருக்கும் அ.தி.மு.க.,வால் தி.மு.க.,வை முழு வேகத்தில் எதிர்க்க முடியவில்லை.
அதே நேரம், மக்கள் சக்தியை தன் பக்கம் வைத்துக் கொண்டு, தி.மு.க.,வை மிகக் கடுமையாக விஜய் விமர்சிப்பது, மக்கள் மத்தியில் எடுபடுகிறது.
இதனால், தி.மு.க,.வுக்கு எதிர்கட்சி என்றால், அது த.வெ.க., என்று மாறிப் போய் உள்ளது. இந்த நிலைக்குக் காரணம், அ.தி.மு.க.,வின் நிலைப்பாடுதான். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
--நமது நிருபர்-