ADDED : பிப் 06, 2025 01:22 AM
சென்னை:சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,810 ரூபாய்க்கும்; சவரன், 62,480 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 106 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 95 ரூபாய் உயர்ந்து, 7,905 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 760 ரூபாய் அதிகரித்து, 63,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலையாகும். வெள்ளி கிராமுக்கு, ஒரு ரூபாய் உயர்ந்து, 107 ரூபாய்க்கு விற்பனையானது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
உலக நாடுகளுக்கு இடையே இதுவரை நடந்த போர்கள், அணு ஆயுதங்கள், தளவாடங்களை பயன்படுத்தி நடந்தன. தற்போது, வளர்ந்த நாடுகளுக்கு இடையே வர்த்தக ரீதியாக போர் நடக்கிறது. அதாவது, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 10 சதவீதம் வரி விதிப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 10 சதவீத வரியை சீனாவும் விதித்துள்ளது. இந்த சூழலில், சீனா போன்ற நாடுகள், தங்களின் செலாவணி கையிருப்பை தங்கமாக மாற்றி வருகின்றன.
இதுபோன்ற காரணங்களால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால், நம் நாட்டிலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.