சுதந்திர தின விழாவில் கருப்பு சட்டை அணிந்து வந்த தலைமையாசிரியர் : எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.,வினர் முற்றுகை
சுதந்திர தின விழாவில் கருப்பு சட்டை அணிந்து வந்த தலைமையாசிரியர் : எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.,வினர் முற்றுகை
ADDED : ஆக 15, 2025 11:25 PM

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் எஸ்.என்.வி., அரசு மாதிரி பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் தலைமையாசிரியர் தர்மராஜ், கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றதால் பா.ஜ., வினர் முற்றுகையிட்டனர். தேசியக்கொடியை அவமதித்ததாக அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் நடந்த சுதந்திரதினவிழாவுக்கு தலைமையாசிரியர் தர்மராஜ் தலைமை வகித்தார். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் தேசியக் கொடி ஏற்றினார். தலைமையாசிரியர் கருப்பு சட்டை அணிந்து வந்த நிலையில் பள்ளி முன் பா.ஜ., வினர் கூடி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து கொடியேற்ற நிகழ்வு நிறைவடைந்து எம்.எல்.ஏ., மற்றும் உடன் வந்த தி.மு.க., வினர் புறப்பட்டனர்.
அப்போது பா.ஜ., நகர் தலைவர் சுரேஷ்பாபு தலைமையிலான கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் சலசலப்புக்கிடையே போலீசார் சமாதானம் செய்த நிலையில் எம்.எல்.ஏ., காரில் புறப்பட்டார். பின்னர் பா.ஜ., வினர் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் பாபு, பா.ஜ., நகர தலைவர் ஆகியோர் தலைமையாசிரியர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அதில் 'இப்பள்ளியில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டிய தலைமையாசிரியர் தேசியக் கொடியை அவமதிக்கும் விதமாக கருப்புச்சட்டை அணிந்து சுதந்திரதின விழாவில் பங்கேற்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித் துள்ளனர்.