திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எம்.பி., வெங்கடேசனுக்கு கண்டனம்
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எம்.பி., வெங்கடேசனுக்கு கண்டனம்
ADDED : பிப் 07, 2025 11:56 PM
மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதுரை எம்.பி., வெங்கடேசன் நேற்றுமுன்தினம் தி.மு.க., அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ஒரு தரப்பிற்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக கருத்தை பதிவிட்டது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது என கண்டனம் தெரிவித்துள்ள ஹிந்து அமைப்புகள் 'இத்தனை நாட்களாக எங்கிருந்தார்' எனக் கேள்வி எழுப்பியுள்ளன.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நிலுவையில் உள்ளன. நீதிமன்ற தலையீட்டால் பிரச்னை ஓய்ந்த நிலையில் நேற்றுமுன்தினம் வெங்கடேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் தெரிவித்துள்ளதாவது
:
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., அமைப்புகள் மதவெறியை கிளப்பிவிட்டு தங்களின் ஓட்டு வங்கியை பலப்படுத்த இதுவொன்றே வழி என்று இறங்கியுள்ளன. அயோத்தி துவங்கி சம்பல் வரை அரங்கேற்றிய நிகழ்ச்சி நிரலை இங்கும் அரங்கேற்ற முயல்கின்றனர். இவர்கள் தங்களின் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றிய இந்த இடங்களில் எல்லாம் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீதிமன்றங்கள், இவர்களின் செயல்திட்ட நிறைவேற்றத்தின் பகுதியாக இருந்துள்ளன. திருப்பரங்குன்றத்திலும் அச்சு அசலாக அதே மாதிரியை இவர்களால் அரங்கேற்ற முடிகிறது என்றால் மாவட்ட நிர்வாகம் மொத்தமாக தோல்வி அடைந்துள்ளது என்பதே பொருள்.
வாதிட்டதும் சரியில்லை
ஜன.27ல் திருப்பரங்குன்றத்தில் 12 கட்சிகளின் நிர்வாகிகள் மக்கள் ஒற்றுமையை கெடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர், போலீஸ் கமிஷனருக்கு மனு அளித்தனர். மக்கள் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிப்பவர்களை தனிமைப்படுத்த கோரும் மிக முக்கிய நடவடிக்கை இது.
மாவட்ட நிர்வாகம், காவல் துறையினர் அயல்நாட்டிலிருந்து ஜனவரி மாதம் தான் திருப்பரங்குன்றத்தில் நுழைந்துள்ளார்களா. வழிபாட்டு மரபுகள் பற்றி எதுவும் தெரியாதது போல, கட்சிகள் சொல்வதை எழுதி வாங்கி, நாங்கள் நீதிமன்றத்தில் தருகிறோம் என்று சொல்வது மட்டும்தான் மாவட்ட நிர்வாகத்தின் பணியா.
மதவெறியர்களை தனிமைப்படுத்த வேண்டிய ஒரு பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் மெத்தனமான அணுகுமுறையோடு செயல்பட்டு வருகிறது. 144 தடை உத்தரவு நிறைவேற்றப்பட்ட முறையும், நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் வாதிட்ட முறையும் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இதற்கு யார் பொறுப்பேற்பது என்பதை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இத்தனை நாட்களாக எங்கிருந்தார்
ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக கோயில் நிர்வாகம், போலீஸ், ஆர்.டி.ஓ., சார்பில் கலெக்டருக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். அதில், மலை படிக்கட்டுகளில் அசைவ உணவு சாப்பிட காரணமாக இருந்த நவாஸ்கனி எம்.பி., குறித்து குறிப்பிடப்படவில்லை. ஹிந்து அமைப்பினருக்கு மட்டும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எங்களை அமைதி கூட்டத்திற்கு அழைக்கவில்லை. உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது ஒரு தரப்பினரை மட்டும் அழைத்து அமைதி கூட்டம் நடத்தியதை பார்க்கும்போது கலெக்டர் நடுநிலை தவறி செயல்படுகிறாரோ என சந்தேகம் ஏற்படுகிறது.
மலை விவகாரத்தில் நேற்று வரை வாய் திறக்காத வெங்கடேசன் எம்.பி., திடீரென சிக்கந்தர் தர்காவுக்கு ஆதரவாகவும், ஹிந்துக்களுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்தை பதிவிட்டுள்ளார். இத்தனை நாட்களாக எங்கிருந்தார். பழங்கால தொன்மைகளை மாற்றாமல் பாதுகாக்க வேண்டுமென குரல் கொடுக்கும் அவர், மலை மீது உள்ள சமணர் படுக்கையில் பச்சை பெயின்ட் அடித்தபோது எங்கே போனார். திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றுவதை ஆதரிக்கிறாரா.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது
'உள்ளூர் மக்கள் அமைதியாக ஒற்றுமையோடு இருக்கிறார்கள். அதனை சீர்குலைக்கும் விதமாக வெளியூரில் வந்த ஹிந்து அமைப்புகளும் பா.ஜ.,வினரும்தான் காரணம்' என வெங்கடேசன் கூறுகிறார். நவாஸ் கனி எம்.பி.,யும், அப்துல்சமது எம்.எல்.ஏ.,வும் வந்தார்களே. அவர்கள் உள்ளுர்காரர்களா. எதன் அடிப்படையில் திடீரென என்ன ஆதாயத்திற்காக பதிவிடுகிறார் வெங்கடேசன்.
ஒரு எம்.பி., என்பவர் அனைத்து தரப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நடுநிலையோடு கருத்து பதவிட வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ளபோது ஒரு தரப்பிற்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக கருத்தை பதிவிட்டுள்ளது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்க்கு எதிரானது.
இவ்வாறு கூறினார்.