மாவட்ட செயலர்கள் நீக்கம் வதந்தி தான்!': ஜி.கே. மணி சொல்கிறார்
மாவட்ட செயலர்கள் நீக்கம் வதந்தி தான்!': ஜி.கே. மணி சொல்கிறார்
UPDATED : மே 20, 2025 10:29 AM
ADDED : மே 19, 2025 11:34 PM

சென்னை. : ராமதாஸ் கூட்டிய கூட்டத்தை புறக்கணித்த, அன்புமணி ஆதரவு மாவட்ட செயலர்கள், கட்சியை விட்டு நீக்கப்பட உள்ளதாக வெளியான செய்தி வதந்தி என்றும், அப்பாவும், மகனும் ஒன்றுமையுடன் உள்ளனர் என்றும், பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையிலான மோதல், கடந்த சில மாதங்களாக தீவிரமடைந்துள்ளது.
எச்சரித்தார்
கடந்த 11ம் தேதி, மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு மாநாட்டில் பேசிய ராமதாஸ், 'வயதாகி விட்டது என்பதால் ஏமாற்ற முடியாது' என அன்புமணியை மறைமுகமாக எச்சரித்தார்.
அதனால், மாநாட்டோடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட தந்தை - மகன் மோதல் மேலும் மோசமடைந்தது.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி, திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலர்கள் கூட்டத்தை ராமதாஸ் கூட்டினார். 108 மாவட்ட தலைவர்கள், 108 மாவட்ட செயலர்கள் என, 216 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 13 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
![]() |
கூட்டத்தில் பங்கேற்காத மாவட்ட செயலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் நேற்று வன்னியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திலும் அன்புமணி பங்கேற்கவில்லை.
பின், ராமதாஸ் அளித்த பேட்டி:
கடந்த 1980ல் துவங்கப்பட்ட வன்னியர் சங்கம், வன்னியர் மக்களின் பிரச்னைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. 20 சதவீதம் இடஒதுக்கீடு பெற்று தந்துள்ளோம்.
ஆலோசனை
வன்னியர்களுக்கு, 10.5 சதவீத தனி ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால், மாமல்லபுரம் மாநாட்டில் கூறியது போல கடுமையான போராட்டத்தை நடத்துவோம். இது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும்.
வன்னியர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பேசவும், சங்கத்தை அமைப்பு ரீதியாக வலுப்படுத்தவும் கூடியுள்ளோம். வரும் சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற, மாவட்டந்தோறும் கூட்டம் நடக்க உள்ளது.
வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள்மொழி தலைமையில், மாவட்டந்தோறும் ஆலோசனை கூட்டம் நடக்கும். அதில், நானும் பங்கேற்பேன். பா.ம.க., குறித்து வதந்தி பரப்பி வருகின்றனர். எப்போதும் போல பா.ம.க.,வும், வன்னியர் சங்கமும் செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விரைவில் முடிவு
வன்னியர் சங்க ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற, பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி அளித்த பேட்டி:
ராமதாஸ் நடத்திய கூட்டத்திற்கு வராத மாவட்ட செயலர்களை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்போகின்றனர் என வதந்தி பரப்பி வருகின்றனர்; இது தவறானது. கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
மூன்று நாட்களாக, ஒரு நல்ல முடிவு எட்டக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ராமதாசும், அன்புமணியும் விரைவில் சந்தித்து பேசுவர்; சலசலப்பு விரைவில் தீர்ந்து விடும். வரும் தேர்தலில் பா.ம.க., வெற்றி பெறும். ராமதாசுக்கு பின், பா.ம.க.,வை வழிநடத்தப் போவது அன்புமணி தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
அன்புமணி பக்கம் கட்சி இருப்பதை ராமதாஸ் ஏற்றுக் கொண்டதை, இந்த பேட்டி உணர்த்துவதாக பா.ம.க.,வினர் தெரிவிக்கின்றனர்.


