/
செய்திகள்
/
தமிழகம்
/
செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பதவி பறிப்பு... தொடர்கிறது! முன்னாள் பெண் எம்.பி.,யும் பொறுப்பிலிருந்து நீக்கம் இ.பி.எஸ்., அதிரடியால் அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி
/
செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பதவி பறிப்பு... தொடர்கிறது! முன்னாள் பெண் எம்.பி.,யும் பொறுப்பிலிருந்து நீக்கம் இ.பி.எஸ்., அதிரடியால் அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி
செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பதவி பறிப்பு... தொடர்கிறது! முன்னாள் பெண் எம்.பி.,யும் பொறுப்பிலிருந்து நீக்கம் இ.பி.எஸ்., அதிரடியால் அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி
செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பதவி பறிப்பு... தொடர்கிறது! முன்னாள் பெண் எம்.பி.,யும் பொறுப்பிலிருந்து நீக்கம் இ.பி.எஸ்., அதிரடியால் அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி
UPDATED : செப் 08, 2025 12:18 AM
ADDED : செப் 07, 2025 11:49 PM

அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள், கட்சி பதவிகளில் இருந்து நீக்கப்படுவது தொடர்கிறது. நேற்று முன்னாள் எம்.பி., சத்யபாமாவின் கட்சி பதவி பறிக்கப்பட்டது. பழனிசாமியின் இந்த அதிரடியான செயல்பாடுகளால், கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்க்க இயலாது என்பதில், கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி உறுதியாக உள்ளார்.
இந்நிலையில், 'கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை, 10 நாட்களுக்குள் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்' என, பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்தார். இது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
ராஜினாமா கடிதம்
உடன், கட்சியின் அமைப்பு செயலர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை விடுவிப்பதாக பழனிசாமி அறிவித்தார்.
மேலும், அவரது ஆதரவாளர்களான, நம்பியூர் வடக்கு, தெற்கு ஒன்றிய செயலர்கள், கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலர், அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலர், அத்தாணி பேரூராட்சி செயலர், ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலர் ஆகியோரின் கட்சி பதவியையும் பறித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில், செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஏராளமானோர், தங்களின் கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக அவரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
அத்துடன், அ.தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலர் பொறுப்பில் இருந்த, முன்னாள் எம்.பி., சத்யபாமா, கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக செங்கோட்டையனிடம் கடிதம் அளித்தார்.
பட்டியல் சேகரிப்பு
இதையடுத்து, சத்ய பாமாவும் அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக பழனிசாமி நேற்று அறிவித்தார்.
அதேபோல, திருப்பூர் மாவட்டம், பல்லடம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் சித்துராஜ். நேற்று முன்தினம், அ.தி.மு.க., சமூக வலைதள குழு ஒன்றில், 'செங்கோட்டையனின் கருத்துகள் சரியே; அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்க வேண்டும்' என்று பதிவிட்டு இருந்தார்.
அதனால், பல்லடம் தெற்கு ஒன்றிய செயலர் பொறுப்பில் இருந்து சித்துராஜ் உடனடியாக விடுவிக்கப்படுவதாக பழனிசாமி அறிவித்துள்ளார். வரும் 12ல், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பல்லடம் நகருக்கு பிரசாரத்துக்காக செல்ல உள்ள நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க.,வில் யாரெல்லாம், செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனரோ, அவர்களை கண்காணித்து, அவர்கள் மீது கட்சி விரோத நடவடிக்கையின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், கட்சி தலைமை தீவிரமாக உள்ளது.
இதற்காக, தமிழகம் முழுதும் இருக்கும் செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட போது, அவர்களின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் நீக்கப்பட்டனர்.
அதுபோல தற்போது, செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை பழனிசாமி பறித்து வருவது, கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -