ADDED : மார் 12, 2024 01:22 AM
சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தீர்வு காணக்கோரிய வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
சென்னையை சேர்ந்த மாலினி என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி, கடந்த மாதம் 19ம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.
ஆண்டு இறுதி தேர்வு நெருங்கி வரும் நிலையில், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தீர்வு காண அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.
அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, ''ஆசிரியர்கள் போராட்டம், கடந்த 8ம் தேதி வாபஸ் பெறப்பட்டு விட்டது,'' என்றார். இதை பதிவு செய்த முதல் பெஞ்ச், விசாரணையை முடித்து வைத்தது.

