ADDED : அக் 15, 2024 06:27 AM
புதுக்கோட்டை : ''வடகிழக்கு பருவமழையால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றி வருகிறோம். இதில், ஆளுங்கட்சி தலையீடு அறவே இருப்பதில்லை,'' என, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டையில் மாநகராட்சி சார்பில் நடைபெற்று வரும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கலெக்டர் அருணா ஆய்வு செய்தனர்.
பின், செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி வருகிறோம்.
இதில், ஆளுங்கட்சியின் தலையீடு எதுவும் இல்லை. அவ்வாறு இருந்தால், எங்களிடம் தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இனி வரும் காலங்களில் வெள்ள நீரால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு, பல்வேறு துார் வாரும் பணிகளும், வாய்க்கால்களை சரி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், 'திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கும்.
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்கும். திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்று, பாட்டு பாடினார்.
பின் அவர், ''கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்களை, தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்றார்.