வரலாற்று சரிவில் ரூபாய் மதிப்பு ஒரு டாலர் ரூ.85ஐ தாண்டியது
வரலாற்று சரிவில் ரூபாய் மதிப்பு ஒரு டாலர் ரூ.85ஐ தாண்டியது
ADDED : டிச 20, 2024 12:51 AM

புதுடில்லி:இதுவரை இல்லாத அளவாக, அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை கண்டுள்ளது. ஒரு டாலர், 85.13 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கரன்சி சந்தையில் நேற்று முன்தினம் வர்த்தக முடிவில், 84.94 ஆக இருந்த ரூபாய் மதிப்பு, நேற்று வணிக துவக்கத்திலேயே, ஒரு டாலர் 85.03 ரூபாயாக சரிந்தது. பிறகு, வர்த்தக நிறைவில்,19 காசு சரிந்த அது, 85.13 ஆக வீழ்ச்சி அடைந்தது.
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், கடன் வட்டி விகிதத்தை கால் சதவீதம் குறைத்தது. இதனால், அமெரிக்க டாலர் மீது சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியது.
இதன் தொடர்ச்சியாக டாலர் மதிப்பு உயர்ந்தது; கூடவே, ரூபாய் மதிப்பு சரிவும் புதிய உச்சத்தை தொட்டது.
உள்நாட்டு பொருளாதார நிலவரம் மட்டுமின்றி; சர்வதேச காரணிகளாலும் ரூபாய் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
ஜூலை - செப்டம்பர் காலாண்டில், உள்நாட்டு மொத்த உற்பத்தியான, ஜி.டி.பி., வளர்ச்சி 5.4% ஆக குறைந்த நிலையில், இறக்குமதி கடுமையாக அதிகரித்து, ஏற்றுமதி குறைந்து, வர்த்தக பற்றாக்குறை அதிகரித்தது.
இதன் காரணமாக இந்திய சந்தைகளில், அன்னிய மற்றும் உள்நாட்டு முதலீடுகள் குறைந்ததும், ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணமானது.
மேலும், சர்வதேச கரன்சிகளுக்கு எதிராக டாலர் தொடர்ந்து வலுப்பெற்று வருவதும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை அதிகரிக்கிறது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டியை குறைத்து அறிவித்தது, ரூபாய் மதிப்பில் மட்டுமின்றி, இந்திய பங்குச் சந்தைகள் வர்த்தகத்திலும் எதிரொலித்தது.
அன்னிய முதலீட்டாளர்கள் உட்பட பலரும், பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்ததால், வர்த்தக துவக்கத்தில், சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு அதிகமாகவும், நிப்டி 300 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டன.
பின்னர், சற்று மீண்டு வர்த்தகத்தை நிறைவு செய்தன.
2024ல் இதுவரை, ரூபாய் மதிப்பு 2 சதவீதம் வீழ்ச்சி
இறக்குமதி அதிகரிப்பால், அதிக டாலர் வெளியேறி ரூபாய் பாதிப்பு
2025ல், ரூபாய் மதிப்பில் சரிவு தொடர வாய்ப்பில்லை என, ஆய்வாளர்கள் கணிப்பு.