அன்று பெய்ததும் இதே மழை... அதிருப்தியில் துாத்துக்குடி மக்கள்
அன்று பெய்ததும் இதே மழை... அதிருப்தியில் துாத்துக்குடி மக்கள்
ADDED : டிச 15, 2024 12:28 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிச., 17 மற்றும் 18ம் தேதிகளில் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் மக்களின் இயல்வு நிலை பாதிக் கப்பட்டது; 52 பேர் உயிர் இழந்தனர். ஏராளமானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர்.
பாதிப்பில் இருந்து மக்கள் ஓரளவுக்கு மீண்டு வந்த நிலையில், ஓராண்டு நிறைவுபெறும் வேளையில் அதே போல மற்றொரு மழை பாதிப்பை மக்கள் சந்தித்துள்ளனர். எனினும், மக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் அதிகம் இல்லை.
கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை தண்ணீர் சூழ்ந்தது. அதேபோன்று தற்போதும் மழைநீர் சூழ்ந்து தண்ணீர் காணப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பணியில் இருந்த ஊழியர்கள், பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நெல்லை - - துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மங்களகிரி விலக்கு பகுதியில் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் வாகன போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது.
குறைந்த அளவு மழை பெய்தாலே பாதிப்பு ஏற்படும் நிலையில்தான் துாத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம் உள்ளது. கடந்த ஆண்டு இங்கு மழைநீர் புகுந்ததில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்தன.
இந்த ஆண்டும் நேற்று, மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகளும், அவர்களுக்கு உதவியாக வந்தவர்களும் அவதிடையந்தனர்.
துாத்துக்குடி -- திருச்செந்துார் இடையே பிரதான இணைப்பு பாலமான முக்காணி உயர்மட்ட மேம்பாலம் கடந்த ஆண்டு மழையில் சேதமடைந்தது. இதுவரை சரி செய்யப்படாததால், காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட தரைமட்ட பாலத்திலேயே வாகன போக்குவரத்து நடந்தது.
தற்போது, அந்த பாலமும் தண்ணீரில் மூழ்கியதால் வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால், திருச்செந்துார் செல்ல பல கி.மீ., தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.