தமிழக அணியில் தேர்வான வீரர்களுக்கு உதவித்தொகை போதாது
தமிழக அணியில் தேர்வான வீரர்களுக்கு உதவித்தொகை போதாது
ADDED : அக் 02, 2024 06:45 AM

மதுரை: தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.) நடத்தும் தேசியப் போட்டிகளில் தேர்வாகும் பள்ளிக்கல்வித்துறையின் தமிழக அணி வீரர், வீராங்கனைகளுக்கு செலவிடும் தொகை குறைவாக உள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் மாநில அளவிலான தடகள, குழுப் போட்டி குடியரசு தினவிழா, பாரதியார் தினவிழாவையொட்டி மாநில அளவில் தடகள, குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதுதவிர தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய போட்டிகளில் தமிழக அணியின் சார்பில் தனியாக வீரர், வீராங்கனைகள் தேர்வு நடைபெறும். தேர்வாகும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.9000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. 12 ஆண்டுகளாக இந்த தொகை உயர்த்தப்படவில்லை. பணம் போதாத நிலையில் மாணவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டியுள்ளது என்கின்றனர் அரசுப் பள்ளி உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள்.
அவர்கள் கூறியதாவது:
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் விளையாட்டுப் போட்டிக்காக ஆண்டுதோறும் ரூ.10 கோடி ஒதுக்கப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களில் கல்வி மாவட்டத்திற்கான குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் துவங்கி மண்டலப் போட்டி, மாநிலப் போட்டி, தேசிய போட்டிக்கு தேர்வாகும் தமிழக அணிக்கான அனைத்து செலவுகளும் இந்த தொகைக்குள் தான் செய்ய வேண்டும். 2012 - 13 ல் முதல்வர் ஜெயலலிதா இதை ரூ.12 கோடியாக உயர்த்தினார். அதன்பின் 12 ஆண்டுகளாக நிதி அதிகரிக்கப்படவில்லை.
தமிழக அணியில் தேர்வாகும் ஒவ்வொரு மாணவருக்கும் ஷூ, விளையாட்டு சீருடை, உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.2500, விண்ணப்ப கட்டணம் ரூ.200, எந்த மாநிலத்தில் போட்டி நடத்தப்படுகிறதோ அங்கு முன்கூட்டியே ஒவ்வொரு மாணவனுக்கும் தலா ரூ.3000 கட்டணம் எல்லாமே இந்த தொகைக்குள் அடங்கும். மேலும் மாணவர்களின் ஒருவார பயிற்சி முகாம், போட்டி முடிந்து திரும்பி வரும் வரையான மூன்று வேளை உணவு (தினப்படி ரூ.250) மற்றும் போக்குவரத்து கட்டணமும் சேரும்.
ரயில் கட்டண சலுகையும் இல்லை:
அருகிலுள்ள கேரளாவில் நடைபெறும் தேசிய போட்டியாக இருந்தாலும் அந்தமான், ஜம்மு, காஷ்மீர், டில்லி என தொலைவில் நடக்கும் போட்டியாக இருந்தாலும் மாணவருக்கான தொகை ரூ.9000 ல் மாற்றமில்லை. மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டது. தற்போது ரத்து செய்யப்பட்டு கல்லுாரி மாணவர்களுக்கு மட்டுமே சலுகை உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு இந்தாண்டு ரூ.516 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிக்கான பரிசுத்தொகை மட்டுமே ரூ.37 கோடி. மாணவர்களின் விளையாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கினால் தான் ஒலிம்பிக் வரை தமிழகத்தின் பங்கேற்பு அதிகரிக்கும். அதேபோல ரயில் கட்டணத்தையும் முன்பு போல சலுகையில் வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.