'அ.தி.மு.க.,வுடனான தோழமை உணர்வு இன்னும் இருக்கிறது':திருமாமளவன்
'அ.தி.மு.க.,வுடனான தோழமை உணர்வு இன்னும் இருக்கிறது':திருமாமளவன்
ADDED : ஜூலை 25, 2025 03:41 AM

சென்னை: “அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை உடைப்பது எங்கள் நோக்கம் அல்ல; நட்புணர்வுடன் தான் கருத்தை சொல்கிறேன்,” என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
பீஹாரில், 50 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபோல், தமிழகத்திலும் நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த மோசமான நிகழ்வை, பார்லிமென்டில் விவாதிக்க கோரி வருகிறோம்.
விடுதலை சிறுத்தைகள் குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முன்வைக்கும் விமர்சனங்களை வரவேற்கிறோம். ஆனால், பா.ஜ., வழிகாட்டுதல்படி விமர்சிக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.
எங்களுக்கு பா.ஜ., தான் கொள்கை பகை; அ.தி.மு.க., அல்ல. பா.ஜ.,வால் பாதிக்கப்பட்ட அதன் கூட்டணி கட்சிகள் பலவற்றை கூற முடியும். கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்தி, முதுகில் சவாரி செய்து, அந்தந்த மாநிலங்களில் பா.ஜ., காலுான்றி வருகிறது. அதே யுக்தியை தமிழகத்திலும் பா.ஜ., கையாளுகிறது.
தி.மு.க.,வை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவதை விட, அ.தி.மு.க.,வை பல வீனப்படுத்தி, தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக பா.ஜ., நினைக்கிறது.
அ.தி.மு.க., உடனான தோழமை உணர்வு இன்னும் இருக்கிறது. அக்கட்சி பாழ்பட்டு விடக் கூடாது என்ற பொறுப்புணர்வுடன் தான் சுட்டிக்காட்டுகிறோம்; அ.தி.மு.க., மீதோ, பழனிசாமி மீ தோ காழ்ப்புணர்ச்சி இல்லை. அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை உடைப்பதும் நோக்கம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.