ADDED : செப் 27, 2025 06:20 PM

மதுரை மீனாட்சியம்மன் இன்று ருத்ரபசுபதியார் அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.ருத்திரபசுபதி நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். பொன்னி நதியால் வளம் நிறைந்த சோழ நாட்டின் திருத்தலையூரில் பிறந்தார்.
இந்த ஊர் திருச்சி மாவட்டம் முசிறிக்கு அருகில் உள்ளது. அந்தணர் குலத்தில் அவதரித்த இவர், சிவபெருமானின் திருவடியைத் தவிர வேறு எதையும் சிந்தித்ததில்லை. வேதத்தில் உள்ள ஸ்ரீருத்ர மந்திரத்தை தினமும் ஓதி வந்தார். இவர் ஒருமுறை தொடர்ந்து தாமரை குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று இரவும், பகலும் துாக்கம் இல்லாமல் கைகளை தலை மீது குவித்து ஸ்ரீருத்ரம் ஓதினார். இவரின் அருந்தவத்தையும், வேத மந்திரம் ஓதும் நியதியையும் ஏற்று நாயன்மார்களில் ஒருவராக்கினார். ரிஷப வாகனத்தில் உமையவளோடு எழுந்தருளி தன் திருவடிகளில் சேர்த்துக் கொண்டார்.
பாட வேண்டிய பாடல்
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்னமெய்க்கே அணிவது வெண்முத்து மாலை விட அரவின்பைக்கே அணிவது பன்மணிக்கோவையும் பட்டும் எட்டுத்திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே.