அடியை மீட்டராக மாற்றுவதில் ஏற்படும் குழப்பத்துக்கு வந்தது தீர்வு
அடியை மீட்டராக மாற்றுவதில் ஏற்படும் குழப்பத்துக்கு வந்தது தீர்வு
ADDED : பிப் 15, 2024 01:29 AM
சென்னை:மனை, சாலையின் நீளம் மற்றும் அகலத்தை அடி கணக்கில் குறிப்பிடும் போதும், நிர்வாக நடைமுறையில் அதை மீட்டராக மாற்றும்போதும் ஏற்படும் குழப்பத்துக்கு தீர்வாக, புதிய வழிமுறையை நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வீட்டு மனையை உருவாக்கும்போதும், சாலைகளுக்கான நிலம் ஒதுக்கும்போதும், நீளம், அகலம் தொடர்பான அளவுகள் துல்லியமாக பார்க்கப்படுகின்றன.
இவற்றில், பெரும்பாலான பகுதிகளில் பிரிட்டிஷ் வழிமுறையை பின்பற்றி, அடிக்கணக்கில் குறிப்பிடுவது வழக்கத்தில் உள்ளது.
கேள்வி
ஆனால், அரசு நிர்வாகத்தில் கட்டுமான திட்ட அனுமதி வழங்குவதற்கான விதிமுறைகளில், மெட்ரிக் முறைப்படி நீளம், அகலம் ஆகியவை மீட்டர் கணக்கில் தான் குறிப்பிடப்படுகின்றன.
பயன்பாட்டு நிலையில், அடி கணக்கில் குறிப்பிடப்படும் அளவுகளை, மெட்ரிக் முறைக்கு மாற்றும்போது, சில குழப்பங்கள் ஏற்படுகின்றன.
உதாரணமாக, ஒரு இடத்தில், 30 அடி என சாலையின் அகலம் இருக்கும். ஆனால், அப்பகுதியில், 9 மீட்டர் சாலை இருந்தால் போதும் என விதியில் உள்ளது. இதற்காக, 30 அடியை மெட்ரிக் முறைக்கு மாற்றும்போது, 9.14 மீட்டர் என்று வருகிறது.
இதில், 0.14 மீட்டர் நிலம் கூடுதலாக விடுவதா என்ற கேள்வி எழுகிறது. இதன் அடிப்படையில் பிற அளவுகளும் மாறுகின்றன.
அவசியம்
எனவே, பிரிட்டிஷ் முறை அளவுகளை, மெட்ரிக் முறைக்கு மாற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, டி.டி.சி.பி., இயக்குனர் பி.கணேசன் பிறப்பித்து உள்ள உத்தரவு:
மனை, சாலையின் நீளம், அகலத்தை கணக்கிடுவதில் குழப்பத்தை தீர்க்க, புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுஉள்ளன. இதன்படி, 20 அடி என்பதை 6 மீட்டரா கவும், 30 அடியை 9 மீட்டராகவும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த நடைமுறைகளை உடனடியாக அமல்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டட தளபரப்புக்கு இந்த வழிமுறை பொருந்தாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

