ADDED : அக் 27, 2025 12:41 AM

பல்லடம்: ''தமிழன் தமிழன் என்று உசுப்பேற்றி, தமிழை அழித்தது தான் திராவிட மாடல்,'' என பா.ஜ. மாநில அமைப்பு செயலர் கேசவ விநாயகன் பேசினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் பா.ஜ., பூத் கமிட்டி மாநாடு நேற்று நடந்தது. அதில் பங்கேற்று, கட்சியின் மாநில அமைப்பு செயலர் கேசவ விநாயகன் பேசியதாவது:
தேசிய நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், நம் தேசம் பாதுகாப்பான தேசமாக மாறிவிட்டது; வளர்ச்சிப் பாதையிலும் செல்கிறது. நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றும் அரசாக மத்திய அரசு உள்ளது.
எதிர்க்கட்சிகளையும், எதிரி கட்சிகளையும் ஆட்சியில் இருந்து இறக்கியே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் பா.ஜ., செயல்பட்டு வருகிறது. இதற்கு ஏற்ப எந்த ஒரு ஊழல், முறைகேடு குற்றச்சாட்டும் சொல்ல முடியாத வகையில் பா.ஜ., ஆட்சியும் நடந்து வருகிறது. மீண்டும் பீஹாரையும் கைப்பற்றி, பா.ஜ., சாதனை படைக்கும்.
நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், மகான்கள் வாழ்ந்த புண்ணிய பூமி தமிழகம். இங்கும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மகான்கள் ஆசிர்வாதம் பெற்ற பா.ஜ., தமிழகத்திலும் ஆட்சி கட்டிலில் அமர வேண்டும்.
தமிழன் தமிழன் என்று உசுப்பேற்றி, தமிழகத்தை அழித்தது தான் திராவிட மாடலின் சிறப்பு. இனி அந்நிலை இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
பூத் கமிட்டியினருக்கு பாராட்டு! தி.மு.க., அரசு திட்டமிட்டு நம் ஓட்டுகளை பிரித்து வருகிறது. மத்திய அரசின் சாதனைகள், தி.மு.க., அரசின் ஊழல், முறைகேடுகளை, பூத் கமிட்டி நிர்வாகிகள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். சொந்த பூத்களில் வெற்றி பெறாமல், அடுத்தடுத்த பொறுப்புகளுக்கு செல்ல முடியாது. தேர்தல் வாயிலாக வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும் ஒவ்வொரு பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும் பாராட்டு விழா நடத்தப்படும். - கேசவ விநாயகன், மாநில அமைப்பு செயலர், பா.ஜ.,

