மக்களின் ஏழ்மை நிலை அதிர்ச்சி தருகிறது: நாகையில் கவர்னர் ரவி வேதனை
மக்களின் ஏழ்மை நிலை அதிர்ச்சி தருகிறது: நாகையில் கவர்னர் ரவி வேதனை
ADDED : ஜன 29, 2024 12:24 AM

நாகப்பட்டினம் : நாகையில், தமிழ்நாடு சேவா சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக கவர்னர் ரவி பேசியதாவது:
நாகை மாவட்டத்தில் பல கிராமங்களுக்கு சென்றேன். பூர்வகுடி மக்களையும், மீனவர்களையும் சந்தித்தேன். அவர்கள் ஏழ்மை நிலை என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலை மாற வேண்டும். நம் நாடு உலகளவில் வேகமாக வளர்கிறது.
பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாவது இடத்தை எட்டியுள்ளோம். தமிழகமும் வளர்ந்து வருகிறது. இருப்பினும், ஏழ்மையை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது.
கீழவெண்மணி சென்று தியாகி பழனிவேலை சந்தித்து உரையாடினேன். 55 ஆண்டுகளுக்கு முன் நடந்த துயரமான சம்பவம் இன்னும் அங்கு நிழலாடிக் கொண்டிருக்கிறது.
நம் மாநிலத்தின் தனி மனித வருமானம், 2.75 லட்சம் என, கூறப்படுகிறது. இங்குள்ளவர்களின் ஆண்டு வருமானம் 40,000 ரூபாயை தாண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
நாடு சுதந்திரம் அடைந்தபோது, குறைந்த காலத்தில் நம் ஏழ்மை ஒழிந்து விடும் என, நம்பினோம். நம் அரசியலமைப்பை உருவாக்கியவர்களும் இதைத்தான் நினைத்தனர். ஆனால், தற்போது வரை பல பகுதிகளில் ஏழ்மையாக உள்ளது.
அரசியலமைப்பு சட்டப்படி, அனைவருக்கும் சமூக நீதி, பொருளாதாரத்தை கொடுக்க வேண்டும் என நம்புகிறோம். ஆனால், நடைமுறைகள் வேறு மாதிரி இருக்கிறது.
சுதந்திரத்திற்கு பின் சிலர் பணக்காரர்கள் ஆகினர். சிலர் மிகப் பெரிய பணக்காரர்கள் ஆகினர். சிலர் ஏழ்மையை பற்றி பேசியே பணக்காரர்கள் ஆகினர். ஏழ்மையை கொண்டு ஒருபோதும் வலிமையான பாரதத்தை உருவாக்க முடியாது.
பிரதமர் மோடி தலைமையில் 35 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டுள்ளனர். கிராமங்களுக்கு சென்று பார்க்கும்போது மத்திய அரசின் திட்டங்கள் முறையாக சேர்ந்திருக்கிறதா என்ற சந்தேகம் உள்ளது.
வீடு என்ற பெயரில் உதவாத ஓலை குடிசையில் வாழ்ந்து வருவது துயரமாக உள்ளது. மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. இவ்வாறு கவர்னர் பேசினார்.