ADDED : டிச 03, 2024 02:18 AM
சென்னை : புயலால், 48 ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
'பெஞ்சல்' புயல் பாதிப்பால், சென்னைக்கு வர வேண்டிய, 25 ரயில்கள், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய, 23 ரயில்கள் என, மொத்தம், 48 ரயில்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டு, சென்னை வந்த, 20க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
காக்கிநாடா -- புதுச்சேரி விரைவு ரயில், கச்சிகுடா- - புதுச்சேரி விரைவு ரயில்கள் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டன. அதில் வந்த பயணியருக்காக, செங்கல்பட்டு முதல் புதுச்சேரிக்கு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. இது தவிர, காட்பாடி, மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம், விழுப்புரம் சந்திப்பு, திருவண்ணாமலை ஆகிய ரயில் நிலையங்களில் பயணியருக்கு உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.
இதற்கிடையில், விக்கிரவாண்டி -- முண்டியம்பாக்கம் இடையே ஒரு பாதையிலும், திருக்கோவிலுார் -- தண்டரை இடையேயும் மீண்டும் ரயில் சேவை துவங்கியது.
அனைத்து ரயில் சேவைகளையும் இயல்பு நிலைக்கு கொண்டு வர, அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.