தமிழகத்தில் திடீர் உர தட்டுப்பாடு அதிகளவில் பதுக்கியதே காரணம்
தமிழகத்தில் திடீர் உர தட்டுப்பாடு அதிகளவில் பதுக்கியதே காரணம்
ADDED : செப் 20, 2025 12:58 AM
சென்னை:தமிழகத்தில் உர தட்டுப்பாடு உருவாகியுள்ளதற்கு, அதிகளவில் பதுக்கல் தான் காரணம் என, தெரியவந்து உள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடி, 6.09 லட்சம் ஏக்கரில் நடந்து வருகிறது. மாநிலம் முழுதும், 13 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி நடக்கிறது.
பயிர் சாகுபடி அதிகரிப்பு காரணமாக, பல மாவட்டங்களில் யூரியா, பொட்டாசியம், டி.ஏ.பி., கூட்டு உரம் தேவை அதிகரித்துள்ளது.
ஆனால், பல கடைகளில் உரங்கள் கையிருப்பு இல்லை. இருப்பு வைத்துள்ள சில கடைகளில், யூரியா விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
எச்சரிக்கை கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை வழங்க வேண்டிய உரங்களை, மத்திய உர அமைச்சகம் தமிழகத்திற்கு ஒதுக்கவில்லை. மொத்த ஒதுக்கீட்டில், 57 சதவீதம் மட்டும்தான் கிடைத்து உள்ளது.
தமிழகத்திற்கு தேவையான உரங்களை வழங்கும்படி, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையே, சம்பா சாகுபடியின்போது விலை அதிகரிக்கும் என்பதால், விற்பனைக்கு வந்த உரங்களை, கடை உரிமையாளர்கள், ஆளும் கட்சியினர், பெரிய விவசாயிகள் அதிகளவில் வாங்கி பதுக்கியுள்ளதாக தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து, டெல்டா மாவட்ட விவசாயிகள் கூறியதாவது:
சாகுபடி துவங்குவதற்கு முன், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் உர வினியோகம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வோர் மீதும், பதுக்கு வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டது.
நிர்ப்பந்தம் ஆனால், யூரியாவுடன், 700 ரூபாய்க்கு பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்டவை வாங்க வேண்டும் என, தனியார் கடைகளில் நிர்ப்பந்தம் செய்யப்பட்டது.
யூரியா தேவை என்பதால், வேறு வழியின்றி, அவற்றை விவசாயிகள் வாங்கினர். இதை வேளாண் துறை கண்டுக்கொள்ளவில்லை.
இப்போது, மத்திய அரசு உர வினியோகத்தை குறைத்துள்ளதால், இருக்கும் உரத்தை பதுக்கும் நடவடிக்கையில், அரசியல்வாதிகள் துணையுடன் பெரிய விவசாயிகள், கடை உரிமையாளர்கள் இறங்கியுள்ளனர். இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தி.மு.க., பிரமுகர் மீது
அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை: மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு எடுத்து செல்வதற்காக, 1,350 டன் யூரியா, குஜராத்தில் இருந்து சரக்கு ரயிலில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த யூரியா, மதுரை கூடல்புதுார் பகுதியில் உள்ள, 'குட்ஷெட்டிற்கு' வந்தடைந்த நிலையில், தி.மு.க., வட்ட செயலராக உள்ள செந்தில், 'லோடுமேன்'களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்ற விடாமல், தடுத்து வைத்திருக்கிறார். மாலை, 6:00 மணிக்கு முன் லோடு ஏற்றினால், 100 ரூபாய்; 6:00 மணிக்கு மேல் ஏற்றினால், 300 ரூபாய் கூலி வழங்க வேண்டும். 'லோடு மேன்' கூலியில் அதிக கமிஷன் வாங்குவதற்காக, தி.மு.க., வட்ட செயலர், மாலை, 4:00 மணிக்கே வந்து, யூரியா மூட்டைகளை ஏற்ற விடாமல், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் என, அனைவரையும் அலைக்கழிக்கும் வகையில், ரவுடிகளை வைத்து, லோடுமேன்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய, 1,350 டன் யூரியா மூட்டைகள், மதுரை குட்ஷெட்டில் தேங்கி கிடக்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.