தி.மு.க., அரசின் தலையில் குட்டு வைத்த உச்சநீதிமன்றம்
தி.மு.க., அரசின் தலையில் குட்டு வைத்த உச்சநீதிமன்றம்
ADDED : அக் 14, 2025 06:45 AM

காரைக்குடி: ''தி.மு.க., அரசின் தலையில் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதால் தலைகுனிந்து நிற்கிறது,'' என, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ., சார்பில் நடந்த தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் பிரசாரத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டித்துரை வரவேற்றார். தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், பா.ஜ.,வினர் பங்கேற்றனர்.
இதில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது : சிவகங்கையை மீட்டெடுத்த ராணி வேலுநாச்சியார் பிறந்த பூமி. ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என ஜம்புபிரகடனம் அறிவித்தனர் மருது சகோதரர்கள். அந்த பிரகடனத்தை நினைவுகூருகிறேன். அது போன்று இன்று ஒரு பிரகடனம் வேண்டும். திராவிட மாடல் ஆட்சி ஒழிய வேண்டும். அதற்கு காரைக்குடியில் பிரகடனம் எடுப்போம்.
தே.ஜ., கூட்டணி ஆட்சி
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் அமைய வேண்டும். இன்றைக்கு பள்ளி, கல்லுாரி வாசல்களுக்கு கூட செல்ல முடியாத நிலையில் கஞ்சா விற்பனை தாராளமாக நடக்கிறது. தி.மு.க.,வில் மாவட்டம், மண்டலம் வாரியாக முதல்வர்கள் உள்ளனர். இந்த ஆட்சியில் போலீசார் செயல்பாடு சரியாக இல்லை.
தி.மு.க., அரசை அகற்றும் நோக்கில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்தனர். சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியில் ரூ.3 லட்சம் தருகின்றனர். ஆனால், கள்ளச்சாரம் குடித்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்துள்ளனர். சாராயம் குடித்து இறந்தால் தான் இந்த ஆட்சியில் பெரிய மதிப்பு கிடைக்கிறது.
ெஹலிகாப்டரில் இருந்து பூ துாவ அனுமதி மறுத்துள்ளனர். இதுகுறித்து கேட்க போலீஸ் உயர் அதிகாரிக்கு அலைபேசியில் அழைத்த போது அவர் எடுக்கவில்லை. போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். இந்த ஆட்சியை நம்பி இருக்காதீர்கள். உங்கள் செயல்பாடு நேர்மை, நியாயமாக இருக்க வேண்டும். ஆட்சி மாற்றம் வரும்போது நீங்கள் இருக்க மாட்டீர்கள். மத்தியில் பா.ஜ.,வை போன்று, மாநிலத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும்.
கரூரில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். கட்சியினர் கேட்கும் இடத்தில் அனுமதி கொடுப்பது தான் சிறந்தது. கரூர் சம்பவம் நடந்த உடனே 30 ஆம்புலன்ஸ் எப்படி உடனே வந்தது. இதில் தவறு உள்ளதாக உச்சநீதிமன்றம் தி.மு.க., அரசின் தலையில் கொட்டியுள்ளது. இதனால் தமிழக அரசு தலைகுனிந்து நிற்கிறது. இரவில் 41 உடல்களை எப்படி உடற்கூறாய்வு செய்தீகள் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக நல்ல தீர்ப்பு வரும். எந்த அமைச்சர் சிக்க போகிறார்கள் என தெரியவில்லை. அவர்கள் விரைவில் சிறைக்கு செல்வார்கள். காரைக்குடி சட்டசபை தொகுதிக்கு பிரதமர் மோடி வருவார். இவ்வாறு அவர் பேசினார்.