நிர்வாக திறனுக்கு கிடைத்த விருதுகள் தமிழக அரசு பெருமிதம்
நிர்வாக திறனுக்கு கிடைத்த விருதுகள் தமிழக அரசு பெருமிதம்
ADDED : மே 05, 2025 01:26 AM
சென்னை:: 'தேசிய அளவிலும், மாநில அளவிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள், தமிழக அரசின் நிர்வாக திறனை பாராட்டி பல விருதுகளை வழங்கியுள்ளன' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் தொலைநோக்கு சிந்தனைகளுடன் நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்கள், மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டுகின்றன. காலை உணவு திட்டம், இல்லம் தேடி மருத்துவம் திட்டம், அயல் நாடுகளிலும், ஐ.நா., சபையிலும் பாராட்டி வரவேற்கப்படுகிறது.
அச்சுறுத்திய கொரோனா, அடுத்தடுத்து நிகழ்ந்த புயல் மழை, வெள்ளக் கொடுமைகள், கரம் கொடுத்து உதவ வேண்டிய மத்திய அரசின் பாராமுகம் என அனைத்தையும் கடந்து, திட்டங்களை செயல்படுத்தி, நாட்டிலேயே முதல் மாநிலமாக, தமிழகத்தை முதல்வர் உயர்த்தியுள்ளார்.
தமிழக மக்கள், மகளிர், மாணவர்கள், தொழிலாளர்கள், தொழில் முனைவோர் அனைவரும் பாராட்டுகின்றனர். பிற மாநில அரசுகள், நீதிமன்றங்கள் பாராட்டுகின்றன.
இத்தனைக்கும் மேலாக, மத்திய அரசே தமிழக அரசை பாராட்டி, ஏராளமான விருதுகளை வழங்கியுள்ளது. அவையெல்லாம் தமிழகத்திற்கு பெருமையையும், பெருமிதத்தையும் ஏற்படுத்தும்.
மத்திய அரசு வழங்கிய பல்வேறு விருதுகளுடன், தேசிய அளவிலும், மாநில அளவிலும் உள்ள பல்வேறு நிறுவனங்கள், தமிழக அரசின் நிர்வாக திறனை பாராட்டி, பல விருதுகளை வழங்கியுள்ளன. முதல்வர் ஸ்டாலினை, மிகச்சிறந்த நிர்வாக ஆளுமை மிகுந்தவர் என, பலரும் மகுடம் சூட்டுவது, தமிழகத்திற்கு கிடைத்துள்ளது தனிச்சிறப்பு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.