திருச்செந்துார் விழா; கும்பாபிஷேக வரலாற்றில் ஓர் 'மைல்கல்'
திருச்செந்துார் விழா; கும்பாபிஷேக வரலாற்றில் ஓர் 'மைல்கல்'
UPDATED : ஜூலை 10, 2025 11:46 PM
ADDED : ஜூலை 10, 2025 12:55 AM

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 300 கோடி ரூபாயில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, 14 ஆண்டுகளுக்கு பின், ஐந்து லட்சம் பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக கும்பாபிேஷகம் நடந்திருக்கிறது; இது, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு. ஹிந்து சமய அறநிலையத்துறை உருவான, 1951ம் ஆண்டிலிருந்து இன்று வரை, இது போன்ற, மாபெரும் திருப்பணியும், கும்பாபிஷேகமும்தமிழகத்தின் வேறு எங்கும் நடந்ததில்லை என்பது, தமிழக அரசுக்கும் பெருமை சேர்க்கக்கூடியது.
கும்பாபிஷேகத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், பிற மாநிலங்களில் இருந்தும், ஏன், வெளிநாடுகளில் இருந்தும் கூட லட்சோப லட்சம் பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானின் அருளைப் பெற்றனர். தமிழகத்தின் ஆன்மிக வரலாற்றில் இப்படியொரு மெகா திருப்பணி நடந்து, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றால்... அது, திருச்செந்துார் முருகன் கோவிலாகத்தான் இருக்கும்.
கும்பாபிஷேகத்தின் சிறப்பு
பிற கோவில்களில் நடந்த கும்பாபிஷேகங்களைக்காட்டிலும், திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் விசேஷமானது. பொதுவாக அனைத்து கோவில்களிலும் 17, 25 அல்லது 33 ஹோம குண்டங்கள் மட்டுமே வைத்து யாகங்கள் செய்வர். ஆனால், திருச்செந்தூர் கோவிலில் முருகனுக்கு மட்டும் 49 ஹோம குண்டங்கள், மற்ற பரிவார மூர்த்திகளுக்கு 30 ஹோம குண்டங்கள் சேர்த்து மொத்தம், 79 ஹோம குண்டங்கள் வைத்து யாகம் நடத்தப்பட்டது. சிறிய கோவில் முதல் பெரிய கோவில் வரை இதுவரை 2, 4 அல்லது 6 காலம் பூஜைகள் மட்டுமே நடக்கும்; திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகத்தில் 6 நாட்களில் 12 கால பூஜை நடந்தது.
கும்பாபிஷேகம் என்பது அந்த கோவிலைச் சார்ந்த பக்தர்களும், மற்றவர்களும் முன்வந்து உபயதாரர்களாக இருந்து நடத்துவதுதான். திருச்செந்தூர் முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் இப்படி சிறப்பான முறையில் நடந்ததற்கு அதிக உபயதரர்கள் முன் வந்ததே காரணம். சிறந்த தக்காரோ, நிர்வாக குழுவோ, அறங்காவலர் குழுவோ இருந்தால் மட்டுமே உபயதாரர்கள் முன் வருவார்கள் என்பதும் நிதர்சனம். அருள் முருகன் தலைமையில் நிர்வாக குழு இருப்பதாலும் அவருக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு இருந்ததாலும், கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது என்றால் அது மிகையல்ல.
ரூ.200 கோடி தனியார் பங்களிப்பு
துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தோரின், எச்.சி.எல்., துணை நிறுவனம், 200 கோடி ரூபாயில் திருச்செந்துார் கோவிலில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக்கொடுக்க முன்வந்தும், நிர்வாக நடைமுறைகளால் கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுத்த விடாமல் இருந்ததாக ஒரு தகவல் உண்டு. தி.மு.க., அரசு பதவியேற்றதும் அறநிலையத்துறை அமைச்சர் உடனே நிர்வாக ஒப்புதல் வழங்கியதால், எச்.சி.எல்., நிறுவனம் மேம்பாட்டு பணிகளை, கோவில் திருப்பணிகளுடன் சேர்த்தே துவக்கியது. கோவில் சார்பில் 100 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக தமிழக அரசை, குறிப்பாக ஹிந்து சமய அறநிலையத்துறையை பாராட்டலாம்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிய பெருந்திரள் மக்கள் கூட்டத்தில் ஒரு சிறு அசம்பாவிதத்துக்கு கூட இடமளிக்காமல் மிகுந்த ஒழுங்கு முறையுடன், கட்டுக்கோப்பாக விழா நடந்து முடிந்திருப்பது நாட்டிற்கே முன்னுதாரணம்.
வடமாநிலங்களில் இதுபோன்ற பக்தர்களின் பெருவெள்ளத்தில் நடந்த ஆன்மிக விழாக்கள் சிலவற்றில் நெரிசல் அசம்பாவிதங்கள், உயிரிழப்பு துயரம் நடந்ததையும் நாம் அறிவோம். ஆனால், அதுபோன்ற சிறு அசம்பாவிதம் கூட திருச்செந்துாரில் இல்லை; அந்தளவிற்கு மிகச்சிறந்த முறையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை காவல்துறை செய்திருந்தது; 'நகையை காணவில்லை' என்பது போன்ற 4 வழக்குகள் மட்டுமே பதிவாகின.
தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை இதுவரை எத்தனையோ கும்பாபிஷேகங்களை நடத்தியிருக்கிறது. ஆனால், நடந்து முடிந்த திருச்செந்துார் முருகன் கோவில் கும்பாபிஷேகம் அந்த துறையின் வரலாற்றில் ஒரு மைல்கல். தினந்தோறும் தன்னார்வலர்கள் வழங்கிய அன்னதானமும், விழா நாளில் ஏறத்தாழ லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட பிரசாதமும், அவற்றைப் பெற பக்தர்கள் முண்டியடிக்காமல் நிதானமாக பெற்றுச் சென்ற காட்சியும் போற்றுதலுக்குரியது. இது, தமிழக மக்கள் முருகன் மீது கொண்டிருக்கும் பக்தியை பறைசாற்றுகிறது.
பாராட்டுக்கு உரியவர்கள்
அரசியல் ரீதியாக தமிழக அரசை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை யாரும் விமர்சனம் செய்யலாம். ஆனால், திருச்செந்துார் முருகன் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை பொறுத்தமட்டில் யாரும் குறைகூற முடியாத அளவிற்கு சிறப்பாக செயல்பட்டிருக்கின்றனர். நான் அறிந்தவரை, அறநிலையத்துறை அமைச்சர் கடந்த இரு ஆண்டுகளில் 20 முறையாவது திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு நேரடியாகச் சென்று திருப்பணிகள் உள்ளிட்ட பிற பணிகளை மேற்பார்வையிட்டிருப்பார்.
அதன் விளைவாகவே, தனியார் பங்களிப்பு 200 கோடி ரூபாய், கோவில் நிதி 100 கோடி ரூபாய் என, மொத்தம் 300 கோடி ரூபாயில் கோவில் திருப்பணிகள் விரைவாக நடந்திருக்கிறது. உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள்; அன்னதான கூடம், காவல், தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை கண்காணிப்பு, முடிகாணிக்கை செலுத்துமிடம், பொருள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை, 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன; எஞ்சிய பணிகள் அடுத்த இரு மாதங்களில் நிறைவு பெறவுள்ளன.
கோவில் திருப்பணி, கும்பாபிஷேகம் சிறப்புற நடந்து முடிந்திருப்பதற்கு காரணமாக இருவரை சொல்லலாம். ஒருவர், அமைச்சர் சேகர்பாபு; மற்றொருவர், கோவில் தக்கார் அருள் முருகன். கும்பாபிஷேகம் தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளும் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்பட்டு, திட்டமிட்ட நாளில் விழா நடந்திருப்பதும் பாராட்டுக்குரியது.
பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள்
இந்த கும்பாபிஷேகத்தின் இன்னொரு சிறப்பு, கும்பாபிஷேகத்தை தலைமையேற்று நடத்திய பிள்ளையார்பட்டி பிச்சைக்குருக்கள். இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டு கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தி வருபவர். பழனி, சுவாமிமலை, திருச்செந்தூர் என, மூன்று படை வீடுகளிலும், வடபழனி உள்ளிட்ட முருகன் திருத்தலங்களில் கும்பாபிஷேகம் நடத்தியவர்.
இதுநாள் வரை ஆயிரத்துக்கும் மேலான கும்பாபிஷேகங்களை நடத்தியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.எல்லாவற்றுக்கும் மேலாக, கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்திட மிகுந்த கட்டுக்கோப்புடன் ஒத்துழைத்த லட்சோப லட்சம் முருக பக்தர்களையும் நாம் பாராட்டியே தீரவேண்டும்; இதற்காக தமிழகம் பெருமை கொள்ளலாம்!
- இல. ஆதிமூலம் -வெளியீட்டாளர், தினமலர்