பகவத்கீதையின் மூவரை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் அருளுரை
பகவத்கீதையின் மூவரை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் அருளுரை
ADDED : நவ 14, 2025 03:11 AM

புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, நேற்று முன்தினம், பஞ்ச ஸ்தலங்களான ஆர்.கே.புரத்தில் உள்ள அய்யப்பன் கோயில், இர்வின் ரோட்டில் உள்ள விநாயகர் மற்றும் ஹனுமான் மந்திர், ராஜ்காட் அருகிலுள்ள தர்மவித்ய பாடசாலை,மற்றும் புராண கிலா ஆகியவற்றுக்கு விஜயம் செய்தார். கோயில் நிர்வாகிகள், ஸ்ரீ சுவாமிகளை பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
குருக்ஷேத்திரத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு அருளிய பகவத் கீதை பற்றிய ஸ்ரீ சுவாமிகளின் அருளுரை:
'குருக்ஷேத்ரா' என்ற தலப்பெயர் இதிகாசங்களிலும் புராணங்களிலும் மட்டுமின்றி, வேதத்திலும் இடம்பெற்றிருக்கிறது என்பதால் மிகுந்த புனிதமடைகிறது.
கிருஷ்ண யஜுர்வேத ஆரண்யகம், 'தேஷாம் குருக்ஷேத்ரம் வேதிராஸீத்' யாகவேதி குருக்ஷேத்ரமே ஆகும். இது, அந்த புனித மண் தெய்வீக யாகபூமியாக இருந்த தொன்மையினை காட்டுகிறது.
ஜகத்குரு ஆதிசங்கரர் தம் உபதேசத்தில், 'கேயம் கீதா நாமசஹஸ்ரம்,' அதாவது, பகவத் கீதையையும் பகவானின் ஆயிர நாமங்களையும் பாடுக என கூறியுள்ளார். இந்த உபதேசம் கீதையின் பரம முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அதனை பின் தொடரும் தியானம், சத்சங்கம், தானம் ஆகியன அனைத்தும் அந்த கீதையின் ஆழ்ந்த சிந்தனையை நோக்கியே வழிநடத்துகின்றன.
கீதையின் மூவர் புனித பகவத் கீதையை உலகுக்குக் வெளிக்கொணர்ந்த மூவரை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் முறையே பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா - அர்ஜூனனுக்கு உபதேசம் செய்தவர். மஹரிஷி வேதவ்யாசர், அந்த தெய்வீக உபதேசத்தை யுகங்கள் கடந்தும் நிலைக்க பதிவு செய்தவர். மூன்றாவது ஜகத்குரு ஆதிசங்கராசார்யர்., அந்த சுலோகங்களின் உண்மைப் பொருளைத் தெளிவுபடுத்தி, அத்வைத சத்தியத்தை உலகுக்கு வெளிப்படுத்தியவர்.
'செயலிலே செயலின்மையய்யும், செயலின்மையில் செயலையும் காண்பவனே உண்மையான ஞானி'. இந்த ஸ்லோகத்தின் வெளிப்படை அர்த்தம் எளியதாகத் தோன்றினாலும், அதன் உள்ளார்ந்த பொருள் ஆழ்ந்த தத்துவ நுணுக்கம் கொண்டது. ஞானியல்லாதவர்கள் அறியாமை எனும் இருளில் உறங்குகின்றனர்; ஞானி தன்னறிவின் ஒளியில் விழித்திருப்பவர். அவரின் நிலையை உலகியலானவர்கள் 'இரவு' எனக் கருதினாலும், ஞானிக்குத் தான் பிரம்ம சத்தியமே 'பகல்'. இதனை ஆதிசங்கரர் தமது கீதா பாஷ்யத்தில் மிக அழகாகவும் ஆழமாகவும் விளக்கியுள்ளார்.
இவ்வாறு ஸ்ரீ சுவாமிகள் அருளுரை வழங்கினார்.
- நமது நிருபர் -

