கூட்டணிக்காக அலை பாய்வதில்லை செல்லுார் ராஜு பேச்சால் சிரிப்பலை
கூட்டணிக்காக அலை பாய்வதில்லை செல்லுார் ராஜு பேச்சால் சிரிப்பலை
ADDED : பிப் 22, 2024 03:01 AM

சென்னை:''எங்களுக்கு கூட்டணி இருக்கிறது என்ற நம்பிக்கையை விட, எங்கள் தொண்டர்கள் மீதுள்ள நம்பிக்கை தான் அதிகம். நாங்கள் கூட்டணிக்காக அலைபாய்வதில்லை,'' என, அ.தி.மு.க., - செல்லுார் ராஜு கூறியதற்கு, சபாநாயகர் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில்களால், சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - செல்லுார் ராஜு: அ.தி.மு.க., ஆட்சியில், தமிழகம் உள்ளாட்சி துறையில் முதலிடம் பெற்றது. மக்கள் நல்வாழ்வுத் துறை விருதுகள் பெற்றது. காவல் நிலையங்கள் விருதுகள் பெற்றன.
தமிழகம் முதல் மாநிலமாக இருந்தது. பிரதமரே எங்கள் முதல்வரை பாராட்டினார். தமிழகத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என, உலக சுகாதார மையம் தெரிவித்தது.
தற்போது உங்கள் ஆட்சியில், நிதி அமைச்சர் அற்புதமாகப் பேசினார். அவர் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம். நீங்கள் பேசியது அழகு; தமிழ் அழகு. பேராசிரியருக்குரிய இலக்கணம் இருந்தது; ஆனால் சரக்கு இல்லை.
அமைச்சர் தங்கம் தென்னரசு: 'சரக்கு மிடுக்கா, செட்டியார் மிடுக்கா' என்று பழமொழி ஒன்று உண்டு. இந்த பட்ஜெட்டில் சரக்கும் மிடுக்கு. அதை உருவாக்கிய முதல்வரும் மிடுக்கு.
செல்லுார் ராஜு: மாணவர்கள், இளைஞர்கள் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர், வேலைக்காக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.
கடந்த தேர்தலில் ஆட்சிக்கு வருவதற்காக, நிறைவேற்ற முடியாத திட்டங்களை எல்லாம், நிறைவேற்றுவதாகக் கூறினீர்கள். தற்போது நிறைவேற்ற முடியவில்லை.
கொப்பரை தேங்காய் அரசு கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்போம் என்றீர்கள்; அதை செய்யவில்லை.
சபாநாயகர்: போதும். உங்கள் நேரம் முடிந்து விட்டது.
ராஜு: சபாநாயகரே, நான் உங்கள் ரசிகன்.
சபாநாயகர்: இங்கு இருப்பவர்கள் எல்லாம், உங்கள் ரசிகர்கள்.
ராஜு: மரக்கிளையில் அமரும் பறவை, அதன் கிளை ஒடிந்து விடுமோ என்று அஞ்சுவதில்லை. அதன் நம்பிக்கை கிளையில் இல்லை; சிறகில் உள்ளது. அதுபோல் தான் எங்கள் கட்சி. எங்களுக்கு கூட்டணி இருக்கிறது என்ற நம்பிக்கையை விட, எங்கள் தொண்டர்கள் மீதுள்ள நம்பிக்கை தான் அதிகம்.
சபாநாயகர்: கூட்டணி இல்லை என முடிவு செய்து விட்டீர்கள்.
ராஜு: ஜெயலலிதாவின் துாய தொண்டர்கள் இருப்பதால், கூட்டணிக்காக அலை பாய்வதில்லை. வர உள்ள லோக்சபா, சட்டசபை தேர்தலில், நம் பங்கு என்ன என்பதை, மக்கள் நன்றாக அறிந்துள்ளனர்.
படிக்கும் காலத்தில் பவானி நீரோட்டத்தை அறிந்து, அதை கடந்து சென்று படித்த பழனிசாமிக்கு, மக்கள் மன ஓட்டம் நன்றாக தெரியும்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: ஒரு அழகான சிட்டுக்குருவி மரக்கிளையில் அமர்ந்திருந்தது. இலைகள் உதிர்கிறதா எனத் தெரியவில்லை. அந்த சிட்டுக்குருவி ஒவ்வொரு மரக்கிளையாக தாவிக் கொண்டிருந்தது.
ஏற்கனவே, ஒரு மரக்கிளையில் அமர்ந்திருந்தது. தற்போது வேறு மரக்கிளைக்கு செல்லலாமா அல்லது வேறு ஏதேனும் குருவிகள் வருமா என, வருத்தத்துடன் உள்ளது.
எனினும், அடுத்த மரக்கிளைக்கு போவோம் எனக் கூறும்போதே, பிரதமர் பாராட்டினார் என, அந்த குருவியின் உள்ளக்கிடக்கையை எடுத்துக் கூறினார்.
உங்களுக்கு எங்கிருந்து பாராட்டு வர வேண்டும் என காத்திருக்கிறீர்களோ, அங்கிருந்து வரட்டும். நீங்கள் நலம் பெறுவீர். சிறப்பு பெறுவீர். உங்கள் எண்ணம் நிறைவேறட்டும்.
இவ்வாறு அமைச்சர்பதில் கூறியதும், சிரிப்பலை எழுந்தது.