தொப்புள் கொடி விவகாரம்: மருத்துவ கவுன்சிலுக்கு டாக்டர் விளக்கம்
தொப்புள் கொடி விவகாரம்: மருத்துவ கவுன்சிலுக்கு டாக்டர் விளக்கம்
ADDED : நவ 06, 2024 02:35 AM
சென்னை:குழந்தை தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில், தமிழக மருத்துவ கவுன்சில் அனுப்பிய நோட்டீசுக்கு பெண் டாக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த 'யு டியூபர்' இர்பான் -- ஆசிபா தம்பதிக்கு ஜூலை மாதம் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை அரங்கில் இருந்த இர்பான், அங்கிருந்த டாக்டர் அனுமதியுடன் தாய் மற்றும் குழந்தையின் தொப்புள் கொடியை கத்தரிக்கோலால் வெட்டினார்.
இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்திலும் பதிவிட்டார்; இது பெரும் சர்ச்சையானது. 'மருத்துவ விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட டாக்டர் நிவேதிதா, இர்பான் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் தெரிவித்தது. இது தொடர்பாக செம்மஞ்சேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதேநேரம் துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டு மருத்துவமனை மற்றும் இர்பானிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் அளித்த விளக்கம் ஏற்கும்படி இல்லாததால், அக்டோபர் 24 முதல் 10 நாட்களுக்கு செயல்பட தடையும் 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இர்பான் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தில் கடிதம் கொடுத்தார். சம்பந்தப்பட்ட பெண் டாக்டரிடம் விளக்கம் கேட்டு தமிழக மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியது. அவரும் தன் விளக்கத்தை அளித்துள்ளார்.
டாக்டர் மற்றும் இர்பான் அளித்த விளக்கம் தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம், மருத்துவ கவுன்சில் தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

