தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வலை வளை: அக். 16

வலை வளை: அக். 16

வலை வளை: அக். 16


UPDATED : அக் 16, 2026 12:00 AM

ADDED : அக் 15, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 12:00 AM ADDED : அக் 15, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவுக்கு வருகிறீர்களா?

அமெரிக்கர் சொன்ன அறிவுரை

அ மெரிக்க கட்டட கலைஞர் டாமன் ஜும்ப்ரோஜெல், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். டில்லி விமான நிலையத்தை குறை கூறி அவர் வெளியிட்ட பதிவு, டிரெண்டிங்கில் உள்ளது.

‘நான் இந்தியாவின் பல நகரங்களுக்கு விமானத்தில் சென்றேன். அவற்றில் டில்லி விமான நிலையம் மிக மோசமான அனுபவத்தை கொடுத்தது. இந்தியாவுக்கு வருபவர்கள், டில்லியை தவிர்த்து, பெங்களூரு, கோழிக்கோடு, கொல்கட்டா அல்லது வேறு ஏதேனும் ஒரு நகரம் வழியாக வாருங்கள் என்பதே எனது அறிவுரை’ என்றார் டாமன். பதிவைக்கண்ட டில்லி விமான நிலைய நிர்வாகம், வருத்தம் தெரிவித்தது. வலைதள பிரியர் ஒருவர், ‘ஊழியர்களை புன்னகை செய்து பழகச் சொல்லுங்கள். பயணியரிடம் கனிவாக, மரியாதையாக நடக்க பயிற்சி அளியுங்கள்’ என்று கமென்ட் செய்தார். அதைப்பார்த்த டாமன், ‘இதை நான் 100 சதவீதம் ஏற்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

கன்டெய்னர் கப்பல் கவிழ்ந்தது

கடலில் மிதந்த ஐபோன்கள்

அ மெரிக்கா -– ஈரான் போருக்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அது தவிர, அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மீறி வரும் கப்பல்களை தாக்குவதற்காக, கடலில் கண்ணிவெடிகளையும் ஈரான் பதித்து வைத்துள்ளது.

இதில் சிக்கிய அமீரக சரக்கு கப்பல், 2500 கன்டெய்னர்களுடன் கடலில் கவிழ்ந்தது. அந்த கன்டெய்னர்களில் இருந்த ஐபோன்கள், வாசனை திரவிய பாட்டில்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடலில் மிதந்தன. அவற்றை படகுகளில் வந்த உள்ளூர்வாசிகள் போட்டி போட்டு அள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பெங்காலி ஸ்வீட் ஹவுஸில்

முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்

பு ளூம்பெர்க் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், இந்தியா வந்துள்ளார். டில்லியில் பிரசித்தி பெற்ற பெங்காலி ஸ்வீட் ஹவுஸில், குடும்பத்தினருடன் உணவு பண்டங்களை ருசி பார்த்த ரிஷி சுனக்கின் படங்கள், வீடியோக்கள் கவனம் பெற்றுள்ளன. சாட், லஸ்ஸி, டீ, ரசமலாய் ஆர்டர் செய்து சாப்பிட்டனர். முன்னாள் பிரதமர், தங்கள் கடைக்கு வந்ததை, அந்த இனிப்பகத்தின் உரிமையாளர், வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

கடுகு எண்ணெய்க்கு

கடுமையான போட்டி

ரா ஜஸ்தானின் ஆல்வார் – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் சென்ற டேங்கர் லாரி, மாடு மீது மோதாமல் தவிர்ப்பதற்காக திருப்பியபோது, சாலையில் கவிழ்ந்தது. டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். கவிழ்ந்த நிலையில் இருந்த டேங்கரில் கடுகு எண்ணெய் சாலையில் கொட்டத் தொடங்கியது. தகவல் பரவியதும், சுற்றுவட்டார கிராம மக்கள் நுாற்றுக்கணக்கான பேர் ஓடோடி வந்தனர். சாலையில் வழிந்த எண்ணெயை பக்கெட், குடம், கேன், பெயின்ட் டப்பா, பாத்திரங்களில் பிடிக்க ஆரம்பித்தனர். ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொண்டு கடுகு எண்ணெய் பிடித்த காட்சி, வலைதளங்களில் பரவி வருகிறது.

‘ஏசி’ ரயில் பெட்டியில்

தாம்பூல விற்பனை ஜோர்

மு ம்பையில் இருந்து சத்தீஸ்கர் செல்லும் ரயிலின் ‘ஏசி’ கோச்சில் பயணிக்கிறார், அந்த வியாபாரி. ரயில் இருக்கையில் பெட்ஷீட் விரித்து அமர்ந்தபடி தாம்பூலம் தயார் செய்கிறார். வெற்றிலையை சுத்தம் செய்து, சுண்ணாம்பு தடவி, பாக்கு, நறுமண பொருட்களையும் சேர்க்கிறார். அவர் செய்வதை பார்த்துக்கொண்டே இருக்கும் பயணியர், ஆளாளுக்கு, ‘எனக்கும் ஒன்று’ என்று ஆர்டர் செய்து கொண்டே இருக்கின்றனர். ‘இப்படியே அவருக்கு 20 முதல் 25 ஆர்டர் வந்திருக்கும்’ என்கிறார், வீடியோ எடுத்த பயணி ஒருவர்.

வீடியோவை பார்த்த வலைதளவாசிகள், ரயில்வே இதை எப்படி அனுமதிக்கிறது, ‘ஏசி’ பெட்டியில் இப்படி செய்யலாமா, சுகாதாரம் இருக்குமா என்று கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us